`எங்களது வாழ்வில் அரசு விடியல் தருமா?'- பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட காமராஜர் பல்கலை முன்னாள் ஊழியர்கள்

பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்
பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்கள் 136 பேரை கடந்த ஏப்ரல் 8-ம் தேதி பணியில் இருந்து நீக்கி பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் தேவைக்கு அதிகமாக, பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி பணியில் சேர்க்கப்பட்டதாக கூறி நீக்க முடிவு செய்யப்பட்டு அதனடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 136 பணியாளர்களுக்கும் முறையாக எந்த முன் அறிவிப்பும் வழங்காமல் பணியில் இருந்து நீக்கிய பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயல் கண்டனத்துக்கு உரியது எனவும், பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தவர்களை நிரந்தரமாக்க வேண்டும். மேலும், காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்காலிக பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காமராஜர் பல்கலைக்கழக வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிச்சை எடுத்த முன்னாள் ஊழியர்கள்
பிச்சை எடுத்த முன்னாள் ஊழியர்கள்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் நேரில் சென்று முறையிட்டோம். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை அழைத்து இது குறித்து எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று குற்றம்சாட்டினர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட 136 பேரும் தற்போது வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். இந்த சூழலில் தான் இன்று பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மட்டுமே ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசாங்கத்திற்கும் கேட்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்.

காமராஜர் பல்கலைக்கழகத்தின் பத்தாண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய பணியாளராக பணியாற்றி வந்தோம். நிரந்தர பணியாளராக பணி அமர்த்தும் நேரத்தில் பணி நீக்கம் செய்துள்ளனர். விடியல் அரசு, எங்களது வாழ்வில் விடியல் தருமா என எதிர்பார்த்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்'' என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in