அழகு, அறிவு, திறமையில் அசத்தல்: மிஸ் கூவாகம் ஆனார் விமான பணிப்பெண் மெகந்தி

முதல் மூன்று இடம் பிடித்த திருநங்கைகள்
முதல் மூன்று இடம் பிடித்த திருநங்கைகள்

மிஸ் கூவாகம் போட்டியில் அழகு, அறிவு, திறமை என்று பல்வேறு விதத்திலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தி மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சென்னையைச் சேர்ந்த மெகந்தி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். அப்போது தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், பிற நாடுகளிலிருந்தும் திருநங்கைகள் இங்கு வந்து தாலி கட்டிக் கொள்வது இந்த கோயிலில் ஐதீகம். கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் திருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 5-ம் தேதியன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டு கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவையொட்டி விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடத்தப்பட்டன. தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்த கூவாகம் திருவிழாவில் ஒன்றாக மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் 50 தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கையர் அறிவு திறமை ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டாம், சுற்று மூன்றாம் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மூன்றாவது சுற்றில் அவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவுத்திறன் உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த மெகந்தி மிஸ் கூவாகம் ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் விமான பணிப்பெண் பயிற்சிக்கான பட்டம் பெற்றவர். திருச்சியை சேர்ந்த ரியானா சூரி இரண்டாம் இடத்தையும் சேலத்தைச் சேர்ந்த ஸ்வீட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

முன்னதாக நடைபெற்ற நடனம், பரதநாட்டியம், பாட்டுப்போட்டி உள்ளிட்டவைகளில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படங்கள்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in