எங்களுக்கு அரசுக் கல்லூரி கிடையாதா?

மறுகும் மணப்பாறை மக்கள்
எங்களுக்கு அரசுக் கல்லூரி கிடையாதா?

மணப்பாறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை இந்த முறையும் நிறைவேற்றப்படாததால் பெரிதும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் மக்கள். 3.25 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணப்பாறைக்கு ஒரு அரசு கல்லூரி கிடையாதா? என்று மறுகுகிறார்கள் மணப்பாறை மக்கள்.

முறுக்குக்கு பெயர்பெற்ற மணப்பாறையில் மாணவர்களுக்கான உயர்கல்விக்கு இடமில்லை. பெரிதும் அடித்தட்டு மக்களே அதிகம் வாழும் இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி இல்லை. அதனால் இப்பகுதி மாணவர்கள் திருச்சியை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு அதிகம் பொருட்செலவும், கால விரயமும் ஆகிறது. இதனால் பள்ளிக்கல்வி முடித்த ஏழை மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வது கணிசமாக குறைந்து கொண்டிருக்கிறது. இங்கு ஒரு அரசு கல்லூரி இருந்தால் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளும் அவதியின்றி உயர்கல்வி படிக்க முடியும் என்பது மணப்பாறை மக்களின் கோரிக்கை.

மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு

தங்களின் கோரிக்கை இந்த ஆண்டு நிறைவேற்றப்படும் என்று காத்திருந்த நிலையில், சட்டமன்றத்தில் 26-ம் தேதி உயர் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி “திருச்சுழி, திருக்கோயிலூர்‌, தாளவாடி, ஒட்டன்சத்திரம்‌, மானூர்‌, தாராபுரம்‌, ஏரியூர்‌, ஆலங்குடி, சேர்க்காடு ஆகிய இடங்களில்‌ புதிய இருபாலர்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளும்‌, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும்” என்று அறிவித்தார். இதையடுத்து, இம்முறையும் தங்கள் ஊரில் கல்லூரி அமைக்க அறிவிப்பு இல்லாததால் மணப்பாறை மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதிமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், ’’இக்கோரிக்கைக்காக ஆட்சியாளர்கள், அதிகாரிகளிடம் மனு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் மணப்பாறை மக்கள் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். கடந்த ஆண்டு வாசலில் மாக்கோலம் போட்டு கோரிக்கையை வலியுறுத்தினார்கள். முகக்கவசத்தில் கல்லூரி வேண்டும் என்று வாசகம் அச்சிட்டு கவனத்தை ஈர்த்தார்கள். முதல்வர் பழனிசாமி வரும்போது என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம்.

மணவை தமிழ்மாணிக்கம்
மணவை தமிழ்மாணிக்கம்

அரசின் கவனத்துக்கு சென்றுவிட்டது என்பதால் அந்த ஆண்டே கல்லூரி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அறிவிக்கப்பட்ட ஏழு புதிய கல்லூரிகள் பட்டியலில் மணப்பாறைக்கு இடமில்லை. இந்த நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று சொன்னார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றிருந்தது.

ஆனால், நடப்பு மானிய கோரிக்கையின் போதும் மணப்பாறை அரசு கல்லூரி குறித்து அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. ஆனாலும் நம்பிக்கையிருக்கிறது. அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து நிறைவேற்றித் தருகிற தமிழக முதல்வர் எங்களின் இந்த கோரிக்கையையும் பரிசீலித்து நடப்புக் கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

அடிப்படை உரிமையான கல்வி கற்பதற்கு எல்லா மக்களுக்கும் சம உரிமை உள்ளது. ஆனால், மணப்பாறை பகுதி சாமானிய மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது வேதனையான ஒன்று. ஒவ்வொரு தேர்தலுக்கும் அரசியல்வாதிகள் தவறாமல் தருகிற வாக்குறுதிகளில் மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்பதும் ஒன்று. அந்த வாக்குறுதிக்கு இனிமேல் இடம் இருக்கக்கூடாது என்பதே மணப்பாறை மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பம் நிறைவேறுகிறதா என்று பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in