ரூ.440 கோடியில் சகல வசதியுடன் மறுசீரமைப்பு: புதுப்பொலிவு பெறுகிறது மதுரை ரயில் நிலையம்!

மறுசீரமைக்கப்படவுள்ள மதுரை ரயில்நிலையம்
மறுசீரமைக்கப்படவுள்ள மதுரை ரயில்நிலையம்

மதுரை ரயில் நிலையத்திற்கு பயணிகள் நெரிசல் இல்லாமல் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.440 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

தென் மாவட்டங்களின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று மதுரை ரயில் நிலையம். இங்கு சுமார் 70 விரைவு ரயில்கள், 26 பயணிகள் ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு, தினசரி பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் எண்ணிக்கை மற்றும் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் மதுரை ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் சூழலில் மதுரை ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் ரூ. 440 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.

இதனடிப்படையில், ரயில் நிலையத்தின் கிளைக்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள பிரதான கட்டிடமானது 22 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் நான்கு தளங்கள் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. தரைத்தளத்தில், பயணிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பயணிகளுடன் நேரடி தொடர்புடைய அலுவலகங்கள் இருக்கும். முதல் தளத்தில், பயணிகள் காத்திருப்பு அரங்கம் அமைகிறது.

மேலும், கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில் பகுதிகளில் 250 கார்கள் நிறுத்தும் வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியும், 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் மல்டி லெவல் டூ வீலர் பார்க்கிங் வசதியும் அமைக்கப்படவுள்ளன. இதில் சரக்கு போக்குவரத்து சேவைக்கென்று பிரத்யேக தனி நடை மேம்பாலம் அமைய உள்ளது.

ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது. ரயில் நிலைய வளாகத்திற்குள் வரக்கூடிய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ கார் போன்றவற்றிற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளும் மேற்கூரை மற்றும் பயணிகளுக்கான பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்பட உள்ளது. தற்போது, பயன்பாட்டில் இருக்கும் இரு நடை மேம்பாலங்கள் மேற்கு நுழைவு வாயிலில் உள்ள ரயில் நிலைய கட்டடமும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

பயணிகள், சரக்குப் போக்குவரத்து தொடர்பான சேவைகள் பயணிகள் வருகை புறப்பாடு ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட உள்ளது‌. ரயில் நிலைய கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்களை இணைக்கும் வகையில் பயணிகள் காத்திருப்பு அரங்கு கட்டப்பட உள்ளது. இங்கு, ஓய்வறைகள் கழிப்பறைகள் உணவகங்கள் போன்றவை அமைய உள்ளன. இங்கிருந்து நடைமேடைக்கு செல்ல நகரும் படிக்கட்டு போன்ற அமைப்புகளும் அமைக்கப்படவுள்ளன.

இத்தகைய மறுசீரமைப்பு பணிகளை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in