200 ஆண்டுகள் பழமையான புதுமண்டபம் கடைகள் அகற்றம்

200 ஆண்டுகள் பழமையான புதுமண்டபம் கடைகள் அகற்றம்
காலி செய்யும் கடைக்காரர்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சந்நிதி எதிரே உள்ளது புதுமண்டபம். நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபம் இப்போது, வணிக வளாகமாகச் செயல்பட்டுவருகிறது. 330 அடி நீளமும், 105 அடி அகலமும் கொண்ட இந்த புதுமண்டபத்தில் (மொத்தப் பரப்பு 34,650 சதுர அடி) சுமார் 15,000 சதுர அடியில் புத்தகக் கடைகள், சீர்வரிசைப் பாத்திரங்கள், பூஜை, யாகசாலைப் பொருட்கள், வளையல் கடைகள், சாமியாடிகள், அழகர் வேடக்காரர்களுக்கான சாமான்கள் என்று சுமார் 300 கடைகள் செயல்பட்டுவருகின்றன. பெரும்பாலான கடைகள் வெறும் 20 முதல் 50 சதுர அடி பரப்பு மட்டுமே கொண்டவை.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி, மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, கோயிலுக்குள் இருந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இந்தக் கடைகளையும் காலி செய்யுமாறு அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கெதிராக கடைக்காரர்கள் போராட்டம் நடத்தியதாலும், வழக்கு தொடர்ந்தாலும் அந்த முடிவு கைவிடப்பட்டது. இந்தக் கடைகளுக்கான மாற்று இடமாக, குன்னத்தூர் சத்திரம் பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது.

இதன் பின்னரும் அந்தக் கடைக்குப் போகாமல் வியாபாரிகள் வீம்பு செய்தார்கள். மின் இணைப்பு இல்லை என்று கூறி வழக்கு தொடர்ந்தனர். மின் இணைப்பு கொடுக்கப்பட்டும், அவர்கள் காலி செய்யாததால், இன்று காலையில் புதுமண்டபத்தில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்துப் பொருட்களை அப்புறப்படுத்தினார்கள், அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, மற்ற கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து பொருட்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதுகுறித்து புதுமண்டப வியாபாரிகள் கூறும்போது, “குன்னத்தூர் சத்திரம் வணிக வளாகத்தில் எல்லா வியாபாரிகளுக்கும் மின் இணைப்பு தரப்படவில்லை. இதுவரையில் 13 பேருக்கு மட்டுமே இணைப்பு தரப்பட்டுள்ளது. அனைவருக்கும் அந்த வசதியை செய்துதரும்வரையில் கடைகளை காலி செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்” என்றனர்.

மதுரையில் சமீபகாலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்துவருகின்றன. அதில் ஏதாவது சாலையோர சிறு கோயில் இடிக்கப்பட்டால்கூட, பாஜகவினர் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் புராதனமான புதுமண்டபம் மீட்புப் பணியில் அறநிலையத் துறை ஈடுபடும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சிலர் ஏற்படுத்திவருகிறார்கள். ஆனால், இதை பாஜகவினர் கண்டுகொள்ளாததது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள் மீனாட்சி பக்தர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in