மதுரை ஆட்சியர் சைக்கிளில் வந்தபோது...
மதுரை ஆட்சியர் சைக்கிளில் வந்தபோது...

மதுரை அமைச்சர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவார்களா?

கலெக்டருக்கு அரசு ஊழியர்கள் கேள்வி

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், வாரந்தோறும் புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு சைக்கிள் அல்லது பொதுப்போக்குவரத்தில் வர வேண்டும் என்று ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்திருந்தார். இதன்படி இன்று தனது கேம்ப் அலுவலகத்தில் இருந்து சைக்கிளிலேயே அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். டவாலியும் போலீஸ்காரரும் அவரை சைக்கிள்களில் பின் தொடர்ந்தனர். இப்படி ஆட்சியர் சைக்கிளில் வந்ததை சாலையில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

நீதிராஜன்
நீதிராஜன்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நினைக்கும் மதுரை ஆட்சியரின் இந்த நடவடிக்கை குறித்து அரசு ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்தறிய விரும்பினோம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் க.நீதிராஜனிடம் கேட்டபோது, “மதுரை கலெக்டரின் நடவடிக்கை வரவேற்கத்தகுந்தது தான். ஆனால், அந்த அளவிற்கு பொதுப்போக்குவரத்து மதுரையில் பலமாக இல்லை. மதுரையின் புறநகர் பகுதிகளில் இருந்து அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் வர போதுமான பஸ்கள் இல்லை. இதனால் தான் டூவீலர்களில் அலுவலகம் வருகிறார்கள். பெட்ரோலால் இயங்கும் டூவீலர்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றால், பேட்டரியால் இயங்கும் டூவீலர்களை அரசு ஊழியர்களுக்கு இலவசமாகவோ, மானியமாகவே வழங்க கலெக்டர் எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “மதுரை மாவட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் அரசுப்பணியை தவிர வேறு பயன்பாட்டிற்கு வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். குறிப்பாக, மதுரை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களின் கார்களுக்குப் பின் இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பின் தொடர்ந்து வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதா? மதுரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அமைச்சர்களும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் நேரடியாக பொதுமக்களின் குறைகளை அவர்கள் கேட்க முடியும். அரசு ஊழியர்களுக்கு உத்தரவிட்ட கலெக்டர், மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க முன் வர வேண்டும்” என்றார்.

ராஜேஷ்
ராஜேஷ்

மதுரை அமெரிக்கன் கல்லூரி பசுமை சங்க செயலாளர் எம்.ராஜேஷ் கூறுகையில், “காற்று மாசு இல்லாத இந்தியா என்ற திட்டத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை ஆட்சியர் எடுத்த இந்த நடவடிக்கை வரவேற்கத்தகுந்தது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், ஜூலை மாதத்தில் இருந்து பிளாஸ்டிக், தெர்மாகோல் உற்பத்தி செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசைத் தடுக்க சென்னையில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகளில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. அதுபோல மதுரை நகரிலும் செய்ய வேண்டும். கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கும் தன்மை கொண்ட நிறைய தாவரங்கள் இருக்கின்றன. அவற்றை போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மதுரை சாலை ஓரங்களில் வளர்த்தால் காற்று மாசு குறையும். மேலும் சென்டர் மீடியன்களில் நடுவே போர்டு வைப்பதற்குப் பதில், புல் வளர்க்கலாம். அதுவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். மதுரையில் உள்ளவர்கள் சைக்கிள் பயன்பாட்டை அதிகமாக்கினால், உடல்நலன் காக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in