பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இடஒதுக்கீடு; மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வெடித்த சர்ச்சை!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட இதுக்கீடு என்ற அட்டவணை உருவாக்கப்பட்ட விவகாரம் கடும் எதிப்பால் முடிவுக்கு வந்திருக்கிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 2022-23-ம் ஆண்டிற்கான முதுகலை (எம்.எஸ்சி,) உயிரி தொழில்நுட்பவியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்தம் 30 சீட்டுகள் மட்டுமே உள்ள இப்படிப்பிற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்தின் 16-வது பிரிவில் சிறப்பு வகைப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள், பொருந்தாது என மூன்று உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பத்தின் கீழ் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10% இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் என்ற இட ஒதுக்கீடு தமிழக பல்கலைக்கழகத்தில் சந்தடியில்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டுள்ளது
பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில், இன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், ‘தமிழகத்தில் இதுவரை 69% இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஆனால், மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் எம்.எஸ்சி., உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான விண்ணப்பத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’ என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், ‘காமராசர் பல்கலைக்கழகத்தில் உயர் வகுப்புக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக அநீதியாகும். இதனை, தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

காமராஜர் பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதம் பக்கம் 1
காமராஜர் பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதம் பக்கம் 1
காமராஜர் பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதம் பக்கம் 2
காமராஜர் பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதம் பக்கம் 2

இப்படியாக பல தரப்பிலும் ஆட்சேபனைகள் கிளம்பியதை அடுத்து, தமிழகத்திற்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தி, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. இதன் அடிப்படையில் மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள சீட்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 8 சீட்டுகளும், பட்டியலினத்தவருக்கு 5 சீட்டுகளும், பழங்குடியின மாணவர் களுக்கு 2 சீட்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சீட்டும், பொதுப்பிரிவினருக்கு 14 சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in