உலக சுற்றுலாத் தலத்தின் அழகைக் கெடுக்கும் மதுரை மாநகராட்சி!

உலக சுற்றுலாத் தலத்தின் அழகைக் கெடுக்கும் மதுரை மாநகராட்சி!
மதுரை திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள்.படம்: ஆர்.அசோக்.

உலக சுற்றுலாத் தலமான திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றி மதுரை மாநகராட்சி குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளதால் அதில் நிரம்பி வழியும் குப்பையால் சுற்றுலாப்பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.

தென் தமிழகத்தில் போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் அழிந்தது போனதுபோக எஞ்சியுள்ள எழில்மிகு பண்டைய அரண்மனைகளில் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையும் ஒன்று. இத்தாலிய கட்டிடப் பொறியாளரின் வடிவமைப்பில் மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் ரசனைக்கேற்ப உருவான இந்த அரண்மனை கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

இந்த அரண்மனையில் 58 அடி உயரம் கொண்ட 248 தூண்களும் , கலை வேலைப்பாடு மிக்க மேற்கூரையும் பார்ப்போரை பரசவம் கொள்ள வைக்கும். தொல்லியல்துறையால் இந்த அரண்மனை பாராமரிக்கப்படுகிறது. இங்கு கடந்த காலத்தில் சினிமா ஷூட்டிங், விளம்பர மாடல் ஷூட் அதிகளவு நடந்தது.

ஆனால் அப்போது அரண்மனையின் சுவர்களில் ஆணிகள் அடித்தும், சுவர்களைச் சேதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஷூட்டிங் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால், தொல்லியல்துறைக்கு கிடைத்த வருவாய் போனாலும் பரவாயில்லை அரண்மனையின் அழகையும், கட்டிடக்கலையும் பாதுகாக்க வேணடும் என்பதே மத்திய, மாநில அரசுகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.


அதுபோல், இந்த அரண்மனையில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை புதிதாக கட்டிடங்கள் கட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு அரண்மனையின் கட்டிடக்கலைக்கும், அதன் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்தும் கொடுத்த தொல்லியல்துறை, அதன் எழில் மிகு தோற்றத்தை பாழாக்கும் வகையில் அரண்மனையைச் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை கண்டுகொள்ளாமல் விட்டது சுற்றுலாப்பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.


மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மதுரையில் அதிகளவு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மகாலுக்கு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி குழந்தைகள் கல்விச் சுற்றுலா வருகின்றனர். அதனால், இந்த மகாலைச் சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டியது தொல்லியல்துறை மற்றும் மாநகராட்சியின் கடமையாகும்.

ஆனால், சமீப காலமாக மகாலைச் சுற்றி மாநகராட்சி பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர். அத்துடன் மகாலைச் சுற்றியுள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களைச் சுற்றி சேகரிக்கும் குப்பைகளை ஒட்டுமொத்தமாக மகால் அருகே உள்ள தொட்டிகளில் கொட்டி குப்பை சேகரிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர். இதனால், காலை நேரத்தில் மகாலைச் சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை.

ஒரு காலத்தில் மதுரை வரும் சுற்றுலாப்பயணிகள், வெளியூர் பயணிகள், மகாலைத் தொலைவில் இருந்து அதன் கட்டிடத்தின் அழகைப் படம்பிடித்து ரசிப்பார்கள். தற்போது மகாலைத் தொலைவில் இருந்து படம்பிடித்தால் சுற்றிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு அதன் நடுவில் மகால் இருப்பதுபோல் தோற்றம் காட்டுகிறது. மேலும் பகல் பொழுதில் மகாலைச் சுற்றியிருக்கும் வணிக வளாக குப்பைகள், குடியிருப்பு குப்பைகள் அங்கு வந்து தான் வந்து கொட்டப்படுகிறது. அதனால், மகாலுக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முகம் சுளித்துச் செல்கின்றனர்.

மதுரை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டிற்கு முன் வீடு, வீடாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், வணிக வளாகத்திற்கும் நேரடியாக சுகாதாரப்பணியாளர்கள் சென்று குப்பைகளைச் சேகரித்தனர். அதை அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று உரமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. குப்பைத் தொட்டிகள் இல்லாத நகராக மதுரையை மாற்றுவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மாநகராட்சி புதிதாக குப்பைத் தொட்டிகளை வாங்கி சாலைகள், தெருக்களில் வரிசையாக வைக்கத் தொடங்கிவிட்டது. அந்த குப்பைத் தொட்டிகளிலும் மாநகராட்சிபணியாளர்கள் சரியாக குப்பைகளை எடுத்து செல்வதில்லை. அதனால், தற்போது மகாலைச் சுற்றி மக்கள், சுற்றுலாப்பயணிகள் நடமாட முடியாத அளவிற்கு குப்பை மையமாக காட்சியளிக்கிறது. இதனால் உலக சுற்றுலாத்தலமான திருமலை நாயக்கர் மகாலின் அழகு கெடுகிறது. தொன்மையின் அடையாளமாக திகழும் திருமலை நாயக்கர் அரண்மனையை மட்டுமின்றி அதன் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.