`நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது'- குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து விழிப்புணர்வில் அசத்திய சமூக ஆர்வலர்!

`நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது'- குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து விழிப்புணர்வில் அசத்திய சமூக ஆர்வலர்!

நெகிழி பயன்பாட்டை குறைத்து துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மதுரையில் சமூக ஆர்வலர் ஒருவர் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து அண்ணாநகர் உழவர் சந்தையில் விழிப்புணர்வு மேற்கொண்டார்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளது அதிகரித்து வரும் நெகிழி பயன்பாடு. இச்சூழலில், தமிழகத்தில் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் விதமாக தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் 'மீண்டும் மஞ்சப் பை' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து, "மஞ்சப் பை அவமானம் அல்ல, சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகமெங்கும் இருக்கக்கூடிய பல்வேறு தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப் பை மற்றும் துணிப் பைகளை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அசோக்குமார்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அசோக்குமார்

இதன் ஒரு பகுதியாக, இன்று மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக்குமார் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து துணிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து மதுரை அண்ணாநகரில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அண்ணாநகர் உழவர் சந்தையில் நெகிழிப் பைகளில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்களிடம் நெகிழிப் பையை பெற்றுக்கொண்டு இலவசமாக துணிப் பை வழங்கினேன். மேலும், விவசாய பெருமக்களிடம் தங்கள் அங்காடிக்கு வரும் நுகர்வோரை துணிப் பை கொண்டு வரும்படி எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டேன். நெகிழிப் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு பசுமையான இயற்கை பொங்கும் பூமியினை வழங்கிட நாம் வழிவகுத்திட வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in