`2028-ம் ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் செயல்படும்'- நம்பிக்கை தரும் மத்திய அரசின் அறிவிப்பு

`2028-ம் ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் செயல்படும்'- நம்பிக்கை தரும் மத்திய அரசின் அறிவிப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மதுரை மாவட்டம் தோப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ஜைக்கா நிறுவனம் சார்பில் மருத்துவமனை வரைபடம் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. மொத்த திட்ட மதிப்பான ரூ.1,977 கோடியில் தற்போது ரூ. 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீதமுள்ள நிதியை அக்டோபர் 26-ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டறிக்கையை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 2023-ம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என்றும், 2026-ம் ஆண்டு வரை கட்டட பணிகள் நடைபெறும் எனவும், 2028-ம் ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in