நீர்நிலைகளில் கழிவுநீரைக் கொட்டும் வாகனங்களின் உரிமம் ரத்து!

மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி உத்தரவு
நீர்நிலைகளில் கழிவுநீரைக் கொட்டும்
வாகனங்களின் உரிமம் ரத்து!

நீர்நிலைகளில் கழிவுநீரைக் கொட்டும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து சிலர் சட்டவிரோதமாக வணிக வளாகம், குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். எஞ்சியுள்ள நீர்நிலைகளில் பல்வேறு தொழிற்சாலை, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்படுகின்றன. இதனால் குடிநீர் ஆதாரங்களான நீர்நிலைகள் மாசு அடைந்து வருகின்றன.

இதனைத் தடுக்க தமிழக அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் லாரிகள் மூலம், முட்டுக்காடு பகுதியில் உள்ள நீர்நிலையில் கொட்டப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்குப் புகார் வந்தது.

இதனை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மறைமலைநகர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் நாவலூர் கிராமம் முதல் முட்டுக்காடு வரை பக்கிங்காம் கால்வாய் வழியே முட்டுக்காடு நீர்நிலைப் பகுதிகளை ஆய்வு செய்தன.

அப்போது கானாத்தூர், ரெட்டிகுப்பம் பகுதியில் ஒரு தனியார் லாரி முட்டுக்காடு பகுதி குடியிருப்புகளிலிருந்து எடுத்து வந்த கழிவுநீரை பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்தத் தனியார் நிறுவன லாரி உரிமத்தை ரத்து செய்யுமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அந்த லாரியின் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இவ்வாறு நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் லாரிகளின் அனுமதிச்சீட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் ரத்து செய்யப்படும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.