அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கைது செய்யப்பட்ட ஜெபசிங் உள்ளிட்டோர்
கைது செய்யப்பட்ட ஜெபசிங் உள்ளிட்டோர்

முந்திரி லாரி கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர், சி.த.செல்லப்பாண்டியன். தூத்துக்குடி அதிமுகவிலும் முக்கிய பிரமுகர். இவரது 2-வது மகன் ஜெபசிங், ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்துதான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் செல்லப்பாண்டியன்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என இரட்டைத் தலைமை வந்தபோது, இவரிடம் இருந்த ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் இருந்த இவரை சமாதானப்படுத்தும் வகையில் கடந்த ஆட்சியின் இறுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவர் பதவியில் அமர்த்தினார்கள்.

இந்நிலையில் சி.த.செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங், அண்மையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரிகளை லாரியோடு கடத்தியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் ஜெபசிங் கைது செய்யப்பட்டிருந்தார்.

சி.த.செல்லப் பாண்டியன்
சி.த.செல்லப் பாண்டியன்

வழக்கின் பிண்ணனி...

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு முந்திரி ஆலையில் இருந்து 12 டன் எடை கொண்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்புகள், கடந்த நவ.26-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யவே அந்த முந்திரி ஆலை இதை அனுப்பி வைத்தது. இந்த லாரியை ஹரி என்பவர் ஓட்டி வந்தார். தூத்துக்குடியில் உள்ள புதுக்கோட்டைப் பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தபோது, லாரியை ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. நடுவழியில் இறக்கிவிடப்பட்ட டிரைவர் ஹரி, உடனே இந்த விஷயத்தை தனது மேலாளர் ஹரிஹரனை தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார். ஹரிஹரன், இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

உடனே, தூத்துக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடியதில், கடத்தல்காரர்கள் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே லாரியை நடுவழியில் விட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதேநேரம் நாமக்கல் எல்லையான திம்மநாயக்கன்பட்டியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு கார் நின்றது. அதில் இருந்தவர்களைப் பிடித்து விசாரித்தபோது முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங்கும், அவரது கூட்டாளிகள் 6 பேரும் அதில் இருந்தனர். தொடர் விசாரணையில் லாரியைக் கடத்தியது, செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் தலைமையிலான குழுவினர்தான் எனத் தெரியவந்து அவர்களைக் கைதுசெய்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சி.த.செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் மீது, இப்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in