உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் களைகட்டும் கன்னியாகுமரி

உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் களைகட்டும் கன்னியாகுமரி

சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் இப்போது சீசன் எதுவும் இல்லை. ஆனாலும் உள்ளாட்சியில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளின் படையெடுப்பால் கூட்டம் களைகட்டியுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரியைச் சேர்ந்த கணேசன் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ‘உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் வாக்களித்து மேயர், துணை மேயர், நகரசபைத் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்களை 4 ஆம் தேதி தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு கட்சியும், கட்சியின் முக்கியஸ்தர்களும் காய் நகர்த்தி வருகின்றனர். அதேநேரம் அவர்களைத் தக்கவைக்கும் நோக்கத்தில் முக்கியப் பிரமுகர்கள் தங்களுக்கு சாதகமான கவுன்சிலர்களை தங்கள் நேரடிப் பார்வையில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

அந்தவகையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் இன்று காலையில் பதவியேற்ற கையோடு, தங்கள் ஆதரவாளர்களை கன்னியாகுமரிக்கு அழைத்து வரத் தொடங்கியுள்ளனர். இதேபோல் பலரும் குற்றாலத்திற்கும் சென்றுள்ளனர். பள்ளிக்கூடங்கள் திறந்திருப்பதால் கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாதளங்களுக்கு இது சீசனே இல்லை. இப்படியான சூழலில் உள்ளாட்சி அமைப்புகளில் வென்றவர்களின் கூட்டத்தில் கன்னியாகுமரி சீசன் நேரத்தில் இருப்பதுபோல் உள்ளது’’ என்றார்.

Related Stories

No stories found.