கடன் வாங்கியவர்கள் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்யும் கந்துவட்டி கும்பல்: காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்

நாகஜோதி.
நாகஜோதி.

ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்று கட்ட முடியாதவர்கள் புகைப்படங்களை ஆபாச மார்பிங் செய்து உறவினர்களுக்கு கந்து வட்டி கும்பல் அனுப்பி வருவதாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமையால் 2 குழந்தைகளுடன் தம்பதி தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து கந்துவட்டி வசூலிக்கும் கும்பலைக் கண்டறிந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டி சம்பவம் தலைதூக்கியுள்ளது. சமீபத்தில் கடலூரில் கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரூ.5 லட்சம் கடன் வாங்கிய காவலர் செல்வக்குமாரிடம் வட்டியுடன் சேர்த்து 12 லட்ச ரூபாய் கேட்டு கந்துவட்டி கும்பல் மிரட்டியதால் காவலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கந்துவட்டி கொடுமையைத் தடுக்க டிஜிபி உத்தரவின் பேரில் ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, கந்துவட்டி வசூலிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி கூறுகையில்," ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி, ஆன்லைன் லோன் செயலி மூலம் பெறும் வட்டி என அனைத்துமே கந்துவட்டிக்குள் அடங்கும். சென்னை மத்திய குற்றப்பிரிவில் உதவி ஆணையர் தலைமையில் கந்துவட்டி தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்த வட்டி விகிதத்தை விட அதிக அளவில் கந்துவட்டி வசூலித்ததாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளி பலரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளோம்.
மேலும் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற பொதுமக்கள் அதிக வட்டி காரணமாக அதனைச் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் ஆன்லைன் கும்பல், அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக உறவினர்களுக்கு அனுப்பி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

மேலும்," கந்துவட்டி தொடர்பாக காவல் உதவி செயலி மூலமாகவும், ஆன்லைன் லோப் ஆப் கந்துவட்டி புகார்களை 1930 என்ற எண்ணிற்கும், 100, ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். அரசு நிர்ணயித்த வட்டி விகிதத்தை விட அதிக வட்டி வசூலிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in