3,38,400 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி: பாசனத்துக்காக திறக்கப்பட்டது கல்லணை!

 3,38,400 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி: பாசனத்துக்காக  திறக்கப்பட்டது கல்லணை!
அணையை திறந்து வைத்த அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள்

மே 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் அந்த தண்ணீர் கல்லணைக்கு இன்று மதியம் வந்து சேர்ந்தது. அதனையொட்டி காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணை இன்று மாலை திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வந்தது. அதனால் வழக்கத்தைவிட முன்னதாகவே கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் இன்று மதியம் தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. இன்று அந்த அணைக்கு தண்ணீர் வந்துவிடும் என்பது உறுதியானதால் இன்று மாலையே கல்லணை திறக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டனர்.

அணையில் இருந்து பாய்ந்தோடும் தண்ணீர்
அணையில் இருந்து பாய்ந்தோடும் தண்ணீர்

அணையில் இருந்து வெளியேறிய தண்ணீருக்கு நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவி வழிபட்டனர். இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 3,38,400 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

அணை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகள் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. அவற்றிற்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், ஜவாஹிருல்லா, நாகை மாலி, முன்னாள் அமைச்சர் மதிவாணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட நீர்வளத் துறையின் அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in