முப்படை தளபதி இறப்பை விமர்சித்தவருக்கு மகாபாரதக் கதை கூறிய நீதிபதி!

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

முப்படைத் தளபதி பிபின்ராவத் இறப்பை விமர்சித்தவருக்கு, மகாபாரதக் கதையைச் சொல்லி, உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இதையடுத்து நாகர்கோவிலைச் சேர்ந்த ஜி.சிவராஜபூபதி, 5.12.2021-ல் தனது முகநூல் பதிவில், ‘‘பாசிஸ்டுகளின் கைக்கூலி, சர்வாதிகாரி பிபினுக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக தர்மராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில், சிவராஜபூபதி மீது இ.பி.கோ-153, 505 (2) மற்றும் 504 ஆகிய பிரிவுகளின்கீழ் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சிவராஜபூபதி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

“ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர் சாதாரண நபர் அல்ல. முப்படைகளின் தலைமைத் தளபதி. அவரது இறப்பு மிகவும் சோகமான சம்பவம். இதை தேசியப் பேரிடர் என்று கூட சொல்லலாம். எல்லாவற்றையும் விட அவர் சிறந்த வீரர். விபத்தில் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளார். பிபின்ராவத் மீட்கப்படும்போது உயிருடன் தான் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார். இது நெஞ்சை உலுக்கும் சம்பவமாகும்.

மனுதாரரின் செயல் பெரும்பாலானவர்களின் உணர்வை கொச்சைப்படுத்தியதுபோல் உள்ளது. இருப்பினும் மனுதாரரின் முகநூல் பதிவுக்காக, அவர் மீது இபிகோ 153, 505 (2) மற்றும் 504 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது செல்லாது. இதனால் இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர் மகாபாரதத்தின் இறுதி அத்தியாயத்தை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதில், அனைத்து பாத்திரங்களும் இறந்து விட்டனர். திருதராஷ்டிரன் இறுதியாகச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடைசியாக திருதராஷ்டிரன் சொர்க்கத்தில் நுழைந்தபோது, அங்கே துரியோதனன் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.

கோபத்தில் துரியோதனன் மீது கடுமையான வார்த்தைப் பிரயோகம் நடத்தினார். அப்போது, நாரதர் சிரித்துக்கொண்டே, ‘அப்படிப் பேசாதே திருதராஷ்டிரா, சொர்க்கத்தில் அனைத்து முன்விரோதங்களும் இல்லாமல் போய்விடும்’ என்று கூறுவார். எனக்கு, மனுதாரரின் தத்துவப் பின்புலம் தெரியாது. அவருக்கு நமது நாட்டின் தேசிய காப்பியம் பிடிக்காமல் கூட இருக்கலாம்.

அவருக்காக, ‘பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று’ என்ற திருக்குறளை கோடிட்டுக் காட்டுகிறேன். மனுதாரர் இறந்த முப்படைத் தலைமைத் தளபதி குறித்து விமர்சனம் செய்யலாம். ஆனால், அவர் விமர்சித்த விதம் தமிழ் கலாச்சாரத்துக்கு முற்றிலும் விரோதமானது. இதைத் தவிர அவருக்கு நான் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை” இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in