`அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியில்லை'

உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
`அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியில்லை'

தமிழகத்தில் அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கண்டனூர் தர்மலிங்கம் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் படைப்புத் திருவிழா நடத்தப்படும். திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இந்தாண்டு படைப்புத் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை.

திமுக, அதிமுக மற்றும் கட்சிகள் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரினால் உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால் கோயில் சார்பில் அனுமதி கேட்டால் தருவதில்லை. எனவே கறிவேப்பிலை காளியம்மன் கோயில் படைப்பு விழாவில் மடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கவேண்டும்" கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘வடமாடு மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கோரி தினமும் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்குவதில் அரசின் நிலைப்பாடு என்ன?’ எனக் கேள்வி எழுப்பினர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘அரசிதழில் இடம் பெறாத ஊர்களில் வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படாது’ என்றார். இதையடுத்து, மனு தொடர்பாக காரைக்குடி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in