குமரியில் இயக்கப்படுமா சுற்றுலா பேருந்து?

குமரியில் இயக்கப்படுமா சுற்றுலா பேருந்து?

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. கரோனா தளர்வுகளுக்குப் பின்பு, மீண்டும் சுற்றுலாத் தலங்களில் பார்வையாளர்களை அனுமதித்துவிட்ட நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குமரிமாவட்டத்தில் சுற்றுலா பேருந்து இயக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்திலேயே, அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சுசீந்திரத்தில் மும்மூர்த்திகளும் ஒருசேர காட்சிதரும் அற்புத தாணுமாலயன் ஆலயம், பத்மநாபபுரம் அரண்மனை, சிதறால் மலைக்கோவில், உதயகிரிக்கோட்டை, மாத்தூர் தொட்டில்பாலம், காளிகேசம் சூழியல் சுற்றுலா தலம், லெமூரியா, சொத்தவிளை, சங்குத்துறை, முட்டம் கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. பரப்பளவில் மிகவும் சிறிய மாவட்டமான கன்னியாகுமரியில், இவற்றையெல்லாம் சேர்த்து ஒரேநாளில் ரசிப்பதுபோல் சுற்றுலாப் பேருந்து இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் சுற்றுலாப் பிரியர்கள்.

ஆர்.எஸ்.ராஜன்
ஆர்.எஸ்.ராஜன்

இதுகுறித்து காங்கிரஸ் விவசாயப் பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, ”கன்னியாகுமரி சர்வதேச அளவில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலம். இதனால் இங்கே ஆண்டு முழுவதுமே சீசன் இருக்கும். இதேபோல் குமரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஒவ்வொன்றின் பின்னாலும் நம் பாரம்பரியமும், பெருமையும் உள்ளது. உதாரணமாக மாத்தூர் தொட்டில்பாலம், இருபகுதிகளுக்கு இடையே தண்ணீர் கொண்டு செல்ல ‘அப்பச்சி’ என குமரி மக்களால் அன்பாக அழைக்கப்படும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய சாதனை. தக்கலை பக்கத்தில் இருக்கும் உதயகிரி கோட்டையில் இன்று பல்லுயிர் பூங்கா இருக்கிறது. அதே கோட்டைக்குள்தான் டிலனாயின் கல்லறையும் இருக்கிறது. இந்த டிலனாய், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கடல்வழியே படையெடுத்துப் பிடிக்கவந்த வெளிநாட்டுக்காரர். இவர் வருவதைப் பார்த்துவிட்டு நம் மண்ணின் மைந்தர்கள் மாட்டு வண்டியில் இரு பனை மரங்களை வெட்டிப்போட்டு அவர் வருகைக்காகக் காத்து நின்றனர். கடல்மார்க்கமாக வந்த டிலனாய்க்கு மாட்டு வண்டியிலிருந்த பனைமரங்கள் பீரங்கிபோல் தெரிய, அவரே சரணடைந்துவிட்டார். எந்த திருவிதாங்கூர் அரசை எதிர்த்துப் படையெடுத்து வந்தாரோ, அதே திருவிதாங்கூரின் படைவீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வேலையை டிலனாய்க்குக் கொடுத்தார்கள். அவரது கல்லறையும் உதயகிரி கோட்டையில் இருக்கிறது. இது எவ்வளவு பெருமையான ஆவணம்! இந்த வரலாறு சுற்றுலாப் பிரியர்கள் இங்கே படையெடுக்கும்போதே அதிகம்பேரைச் சென்றடையும்.

இதேபோல் திற்பரப்பு அருவியை குமரியின் குற்றாலம் என்பார்கள். சிதறால் மலைக்கோயிலில் சமணர்கால குடைவரைகள் இருக்கின்றன. இந்தச் சிறப்புகள் எல்லாம் குமரிமாவட்ட மக்களுக்குள் சுருங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? குமரி மாவட்டத்துக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் கன்னியாகுமரியை மட்டுமே பார்த்துவிட்டுச் சென்றுவிடும் சூழல்தான் இருக்கிறது. வெகுசிலரே மாவட்டத்தின் பிற சுற்றுலா தலங்கள் பற்றிய புரிதலோடு உள்ளனர். இந்தச் சுற்றுலா தலங்களும், அதன் பின்னே இருக்கும் அரிய வரலாறுகளும் அனைவருக்கும் தெரிய வேண்டும். அதற்காக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி மாவட்டச் சுற்றுலா பேருந்து இயக்கப்பட வேண்டும்.

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தில் இருந்து புறப்படும் இந்தப் பேருந்தை, மீண்டும் அதே கன்னியாகுமரியில் சூரியன் மறையும் காட்சியை பார்ப்பதோடு நிறைவு செய்யலாம். இதற்கு மொத்தமாக ஒருநாளுக்கு இவ்வளவு என கட்டணம் நிர்ணயிக்கலாம். கரோனா 2-ம் அலைக்குப் பின்பு அனைத்துத் தொழில்களும் மிகமோசமான சரிவைச் சந்தித்துள்ளன. இப்படியான சூழலில் அரசு சுற்றுலாத் துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்படி ஒரு பேருந்து இயக்கப்படும்போது, குமரி மாவட்ட மக்களும் குறைவான செலவில் குடும்பத்தோடு பொழுதைக் கழிப்பதோடு, மொத்த மாவட்டத்தையும் ஒரேநாளில் சுற்றிப்பார்த்த நிறைவும் கிடைக்கும். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் இங்கெல்லாம் பயணிக்க இது வாய்ப்பாக அமையும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலையை ரசிக்க, வனத் துறையோடு சேர்ந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அம்பாசமுத்திரத்தில் இருந்து இந்தப் பேருந்துகள் கிளம்புகின்றன. இதேபோல் குமரிமாவட்டத்திலும் சுற்றுலா பேருந்து இயக்கப்பட வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து நாகர்கோவில் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ”கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குமரியில் கோடை விடுமுறையின்போது மாவட்டச் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கினோம். கோடை விடுமுறைக்குப் பின் போதிய வருவாய் ஈட்டாததால் அவை நின்றுவிட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தப் பேருந்து இயக்கப்படவில்லை. சுற்றுலாப் பேருந்து இயக்குவது குறித்து மாவட்ட நிர்வாகமோ அல்லது சுற்றுலா வளர்ச்சித் துறையோதான் கொள்கை முடிவு எடுக்கமுடியும். அப்படி அவர்கள் கோரும்பட்சத்தில் நாங்கள் பேருந்தை இயக்கமுடியும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in