விபத்து எப்படி நிகழ்ந்தது?- களிமேட்டில் விசாரணையை தொடங்கியது ஒரு நபர் குழு

விபத்து எப்படி நிகழ்ந்தது?- களிமேட்டில் விசாரணையை தொடங்கியது ஒரு நபர் குழு
எலுமிச்சம்பழத்தை பார்வையிடும் குமார் ஜெயந்த்

தஞ்சாவூர் அருகே களிமேடு சப்பரம் விபத்து குறித்து தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் குழு இன்று தஞ்சையில் தனது விசாரணையை தொடங்கியது.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், கடந்த 27-ம் தேதி நடைபெற்ற அப்பர் சதய விழாவில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழக சட்டப்பேரவையிலும் பிரதிபலித்தது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து விசாரிக்கவும், இப்படிப்பட்ட விபத்துக்களை தடுப்பது குறித்த வழிகாட்டல்களை அளிக்கவும் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒருநபர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதனையடுத்து விசாரணையை தொடங்குவதற்காக குமார் ஜெயந்த் இன்று தஞ்சாவூர் வந்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளோடு இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் களிமேடு கிராமத்துக்கு சென்ற குமார் ஜெயந்த், விபத்து நிகழ்ந்த இடத்தையும், மின்சாரம் பாய்ந்து எரிந்து உருக்குலைந்து கிடக்கும் சப்பரத்தையும் பார்வையிட்டார். அப்பர் மடம் கோயிலுக்கும் சென்று பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் நளினி ஆகியோரிடம் இது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் விபத்து நடந்த விதம் குறித்து நேரில் பார்த்தவர்களான தாஸ், பாலாமணி, கண்ணகி ஆகியோரிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் குமார் ஜெயந்த் கூறுகையில், ``முதல் கட்டமாக விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து ஒரு அறிக்கையும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிக்கையாக அரசிடம் அளிக்கப்படும். விபத்து தொடர்பாக இன்றும், நாளையும் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும், இந்த விபத்து குறித்து யாரேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணிக்கு சாட்சியம் அளிக்கலாம். விசாரணை முடிந்த பின்னர் இதன் அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.