திருவிழாவில் திடீரென முளைத்த ஸ்பெஷல் மதுக்கடைகள்

அதிகவிலைக்கு விற்பதாக குடிமன்னர்கள் புகார்
திருவிழாவில் திடீரென முளைத்த ஸ்பெஷல் மதுக்கடைகள்

பொதுவாக தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் நடந்தால் அதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். ஆனால் திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழாவை ஓட்டி சிறப்பு மதுக் கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் விசேஷம். அந்த மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்திருக்கும் விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

வீரப்பூர் கோயில் திருவிழாவில்  பக்தர்கள்
வீரப்பூர் கோயில் திருவிழாவில் பக்தர்கள்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசிமாதத்தை ஒட்டி கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக, திருச்சி மாநகரில் புத்தூர் குழுமாயி கோயில் திருவிழாவும், ஊரகப் பகுதியில் மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூரில், கன்னிமாரம்மன் வகையறா திருக்கோயில்களில் பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்று வருகிறது. இவ்விழாக்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். அதனால் வீரப்பூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் அரசு மதுபானக் கடையிலும் விற்பனை அதிகரிப்பதும் நடக்கும்.

அதனால் திருவிழாவை முன்னிட்டு வீரப்பூர் கடையின் சார்பில் சிறப்பு மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது அங்குள்ள ஒரே கடையின் எண்ணில் 4 ஸ்டால்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு விற்பனை கன ஜோராக நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு மாநில வாணிபக்கழக திருச்சி மாவட்டம் சார்பில் பிரத்யேகமாக பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் நபர்களில் 28 பேரை இக்கடைகளுக்கு சிறப்பு பணியாளர்களாக தேர்ந்தெடுத்து தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு நாட்களுக்கு மட்டும் இந்த சிறப்பு கடைகள் இயங்கும். இவற்றில் இந்த நான்கு தினங்களில் 60 லட்ச ரூபாய் வரைக்கும் விற்பனை நடக்கும் என்று டாஸ்மாக் தரப்பில் சொல்லப்படுகிறது. இதேபோல வீரப்பூர் பகுதிக்கு அருகே கரூர் மாவட்ட எல்லையிலும் அம்மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சார்பிலும் சிறப்பு மதுக்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபானங்களுக்கு ரூ. 20 முதல் 80 வரையில் விலை அதிகரிக்கப்பட்டது. அது பொதுவான கடைகளுக்கு மட்டும் தான். இந்த சிறப்புக் கடைகளில் அந்த நிபந்தனைகளை கருத்தில் கொள்ளாமல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கூடுதல் விலைகளுக்கும் மேலாக, மேலும் கூடுதல் விலைகளுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கோயில் திருவிழாவின்போது, கூடுதல் மதுக் கடைகள் அமைக்கப்பட்டு இருப்பது குறித்து மகிழ்ச்சி அடையும் குடிமகன்கள் அதிக விலைக்கு விற்க படுவதால் கவலையும் கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in