3,000 லஞ்சம் வாங்கிய விஏஓ-வுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை: 11 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

3,000 லஞ்சம் வாங்கிய விஏஓ-வுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை: 11 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
வசந்தி

3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், இருபதாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் வசந்தி (வயது 45). இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிலை தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் கூட்டுப்பட்டாவை பிரித்து தனிப்பட்டா கேட்டு வசந்தியை அணுகினார்.

அதற்காக விஜயலட்சுமியிடம் வசந்தி ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றார். இதுகுறித்து விஜயலட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் முன்கூட்டியே தகவல் கூறியிருந்ததால் அங்கு மறைந்திருந்த திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வசந்தியை கைது செய்தனர். இதையடுத்து வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதற்கிடையில் வசந்தி மீண்டும் பணியில் சேர்ந்தார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று மாலை வழங்கப்பட்டது. சிறப்பு நீதிபதி ராஜலிங்கம் அளித்த தீர்ப்பில், அரசு ஊழியர் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், அரசு ஊழியராக பணியாற்றுபவர் தனது கடமையை செய்வதற்கு லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்" என கூறினார்.

இதனையடுத்து வசந்தி உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். ஏககாலத்தில் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் வசந்தி 3 ஆண்டுகள் மட்டுமே சிறைவாசம் அனுபவிப்பார் எனத் தெரிகிறது. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க போகிறார் வசந்தி. லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள் இதை பார்த்தாவது திருந்துவார்களா?

Related Stories

No stories found.