விபத்தால் முடங்கிக் கிடக்கும் குவாரிகள்... கட்டுமானப் பணிகள் பாதிப்பு: அரசு செய்ய வேண்டியது என்ன?

குவாரி
குவாரி கோப்புப்படம்

திருநெல்வேலியில் நடந்த குவாரி விபத்து எதிரொலியால் அம்மாவட்டத்தில் உள்ள குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க தொடர் ஆய்வுப்பணிகளும் நடந்துவருகிறது. நெல்லை மாவட்டக் குவாரிகளின் முடக்கத்தினால் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. அரசு கட்டுமானப் பணிகள் முடங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ரஜீஸ்குமார்
ரஜீஸ்குமார்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட அரசு பதிவுபெற்ற பொறியாளர் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் ரஜீஸ்குமார் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கம் ஆகியவை இந்தியாவின் பல மாநிலங்களிலும் இயற்கை வளங்களை பாதிக்கத்தான் செய்கிறது. கேரளம் இதில் கூடுதல் விழிப்புடன் ஆற்றில் இருந்து மண் எடுக்க தடைவிதித்துவிட்டது. அதேபோல் கேரளத்தில் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 200 மீட்டர் நீளம் வரை உள்ள மலைகளை குவாரிகள் ஆக்கவும் தடை உள்ளது. அதேநேரம் கேரளத்தில் பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுமானத் தேவைகளுக்கு தமிழகத்தின் ஆறு, மலைவளங்கள் சூறையாடப்படுவது தொடர்ந்து வருகிறது.

அதிலும் கேரளத்தில் அதானி குழுமம் மேற்கொள்ளும், விழிஞ்சம் துறைமுகப் பணிக்காக நெல்லை, குமரி மாவட்ட மலைவளங்கள் பெரிதும் சூறையாடப்படுகிறது. குமரி, நெல்லையில் உடைக்கப்படும் கற்களில் 20 சதவீதம் மட்டுமே உள்ளூர் தேவைக்கு பயன்படுகிறது. மற்ற அனைத்தும் வெளிமாநிலங்களுக்கும், மாலத்தீவிற்கும் செல்கிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதில் கண்வைக்காமல் ஒட்டுமொத்தமாக குவாரிகளை முடக்கியிருப்பதால் உள்ளூர் கட்டுமானப் பணிகளும் முடங்கிக் கிடக்கிறது.

அரசு செய்ய வேண்டியது என்ன?

1990-ம் ஆண்டு தமிழக அரசு மலையிடு பாதுகாப்புக் குழுமம் என்னும் அமைப்பை உருவாக்கியது. இதன்படி குறைந்தபட்சம் நான்கு சுற்றுச்சூழல் நிபுணர்களையும், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் இணைத்து மலைப்பகுதி வளங்களை கண்காணிப்பதும், இயற்கை சூழல் பாதிக்காத வண்ணம் அனுமதி வழங்குவதுமே இந்த அமைப்பின் நோக்கம். அந்த அமைப்பு சரிவர இயங்குவதில்லை. அதேபோல் குவாரிகளில் அரசால் அனுமதி பெறப்படும் அளவைத் தாண்டி, அதிக ஆழத்தில் குவாரிக்காக குடைகின்றனர். இதேபோல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு டைனமைட் வெடிபொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. அரசுக்கு ஒரு யூனிட் கல்லுக்கு 135 ரூபாய் செலுத்திவிட்டு, பொதுமக்களிடம் 3500 ரூபாய் வரை விற்பனை செய்வது அரசுக்கும் வருவாய் இழப்பை உருவாக்குகிறது.

நெல்லை குவாரி விபத்தின் எதிரொலியால் நெல்லை மாவட்டம், முழுவதும் உள்ள குவாரிகளை தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கவில்லை. இதனால் கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாட்டால் பல இடங்களிலும் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஏற்கெனவே, கரோனா காலக்கட்டத்தில் முடங்கிக் கிடந்த கட்டுமானத்துறை 40 சதவீத கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் நெருக்கடியில் உள்ளது. இதனோடு இப்போது குவாரிகளுக்கான தடை உத்தரவால் சல்லி, செயற்கை மணல் கிடைக்காமல் லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அரசு போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். கட்டுமானப் பணிகளையும் காக்க வேண்டும். அந்தவகையில், குவாரிகளில் மணல், ஜல்லி, கற்கள் விற்பனையை அரசே நேரடியாக நடத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, குவாரிகளும் முறைபடுத்தப்படும். கட்டுமானப் பணிகளும் தொய்வின்றி நடக்கும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in