அடுத்து தலைமைச் செயலகம் முற்றுகை: கொந்தளிக்கும் இளையான்குடி மக்கள்!

அடுத்து தலைமைச் செயலகம் முற்றுகை: கொந்தளிக்கும் இளையான்குடி மக்கள்!
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைப்பதை எதிர்த்து இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இளையான்குடி மக்கள் நலக் கூட்டமைப்பினர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஊருக்கு வெளியே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இளையான்குடியில் ஊருக்குள் உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன் சாா்பில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து அங்கு கடையடைப்பு போராட்டம், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம், முதல்வருக்கு ஐந்தாயிரம் தபால்கள் அனுப்பும் இயக்கம் என தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அதைத் தொடா்ந்து, நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்திருந்தாா். ஆனால், மீண்டும் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டமைப்பு சாா்பில் இன்று இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். அறிவித்தபடியே இன்று இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்கள் மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் சைபுல்லாஹ், செயலாளர் துருக்கி ரபீக் ராஜா ஆகியோர் தலைமையில் பேரணியாக வந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அங்கிருந்த காவல் துறையினர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து மக்கள் நல கூட்டமைப்புத் தலைவர் சைபுல்லாஹ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி யாருக்கும் பயன்தராத வகையில் இளையான்குடியில், ஊருக்கு வெளியே 3 கிலோமீட்டர் தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்யவும், நகருக்குள் உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். விரைவில், தேதி அறிவிக்காமலேயே சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in