‘நான் தயார்.. நீங்களும் தயாராகுங்கள்’; வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கடிதம்

2-வது மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அழைப்பு
உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள 2-வது மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க தயாராக இருக்குமாறு, வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இவர் கடந்த 3 மாதங்களாக வழக்குகளை ரத்து செய்யக்கோருவது மற்றும் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றம் செய்யக்கோரும் குற்றவியல் மனுக்களை விசாரித்து வந்தார்.

இந்த 3 மாத காலத்தில் யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்தது, தஞ்சை பள்ளி மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றியது, ஸ்டெர்லைட், சாத்தான்குளம் போராட்ட வழக்குகள் ரத்து, முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பை விமர்சித்தவர் மீதான வழக்கு ரத்து, நீட் தேர்வை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான வழக்கு ரத்து செய்தது என பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தார்.

பொதுவாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சிமுறையில் பணி ஒதுக்கீடு வழங்கப்படும். அதன்படி பிப்.7 முதல் அடுத்த 3 மாதங்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு 2-வது மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:

‘பிப்.7 முதல் ஏப்.30 வரை 58 வேலை நாட்கள் உள்ளன. எனக்கு 2010 முதல் 2014 வரையிலான 2-வது மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2010-ல் 445 மனுக்கள் நிலுவையில் இருப்பதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. நான் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்புடன் அவற்றை முழுமையாக விசாரிக்க முடிக்க முடிவு செய்துள்ளேன்.

எனவே, வழக்கறிஞர்கள் அனைவரும் பிப்.14 முதல் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்குகளின் விசாரணையை ஒத்திவைப்பது, சிறிது நேரம் நிறுத்திவைப்பது போன்று எதையும் அனுமதிக்கப்போவதில்லை. வழக்கு விசாரணைக்கு எடுக்கும்போது வழக்கறிஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதில் மூத்த வழக்கறிஞர்கள் கவலைப்படத் தேவையில்லை. இளைய வழக்கறிஞர்கள் பயிற்சி பெறட்டும்.

மூத்த வழக்கறிஞர்கள் வேண்டும் என்றால் ஒருநாள் முன்னதாக அவர்கள் சமர்ப்பிக்க வேண்டியவற்றை குறிப்புகளை அனுப்பினால் போதுமானது. கால அவகாசம் குறைவாகவே உள்ளது. வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு அளித்தால் 445 நிலுவை வழக்குகளையும் முடிக்க நான் தயாராக உள்ளேன்.

கடந்தமுறை போல் இல்லாமல் தீர்ப்பு கூறிய நாளிலிருந்து 7 நாட்களுக்குள் தீர்ப்பு நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நீதிமன்றத்தில் தீர்ப்பைச் சொல்லிவிட்டாலும், சில காரணங்களால் அவற்றை தட்டச்சு செய்த பின் திருத்தங்கள் மேற்கொள்வதால், தீர்ப்பு நகல் கிடைப்பதில் தவிர்க்க இயலாத காலதாமதம் ஏற்படுகிறது. இந்த முறை வழக்கறிஞர்கள் புகார் அளிக்கும் நிலை வராது என நினைக்கிறேன்.

எனவே, வழக்கறிஞர்களே 2010-ம் ஆண்டின் மேல்முறையீடு மனுக்களை பரிசீலிக்கத் தொடங்குங்கள். வழக்கு தொடர்ந்தவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தக்க வாரிசுகளிடமிருந்து வக்காலத்துப் படிவங்களை பெற்றுக்கொள்ளங்கள். அதேநேரத்தில் 2010-க்கு பிந்திய மேல்முறையீடு மனுக்களை விசாரிக்குமாறு வேண்டுகோள் வைத்து என்னை தர்மசங்கடத்தில் ஆளாக்காதீர்கள். இரண்டாம் மேல்முறையீடு மனுக்கள் உரிய முறையில் விசாரணைக்கு பட்டியலிடப்படும். என்னுடைய பார்வை எல்லாம் முதலில் 2010-ம் ஆண்டின் மேல்முறையீடு மனுக்களை முழுமையாக விசாரித்து முடிப்பதில்தான் இருக்கிறது. வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்’.

இவ்வாறு கடிதத்தில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in