போக்சோ வழக்கை எப்படி திறம்பட கையாளுவது?- பெண் காவலர்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கை எப்படி திறம்பட கையாளுவது?- பெண் காவலர்களுக்கு பயிற்சி

சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் உள்ளடக்கி காவலர்களுக்கு போக்சோ வழக்குகளை மேலும் திறம்பட கையாளும் வகையில் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. 9 நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொள்ளவும், வழக்குகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் மேலும் திறம்பட புலனாய்வு மேற்கொள்ளவும், பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் மாநில நீதித்துறை அகாடமி இயக்குநர் லிங்கேஸ்வரன், பெண்கள் உதவி மையத்தைச் சேர்ந்த ஷெரின் போஸ்கோ மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்துரு, பெண் வழக்கறிஞர் ஆதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்த விளக்கங்கள், விசாரணை அதிகாரிகள், போக்சோ சட்டப்பிரிவு வழக்குகளின் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் குறித்தும், நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புலனாய்வு மேற்கொள்ளுதல், கோப்புகள் கையாளுதல், பாதிக்கப்பட்ட சிறுமிகளை கையாளுதல், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் உட்பட இந்த வழக்குகளின் முழு புலனாய்வு முறை குறித்து பயிற்சியினை அளிப்பதுடன் காவல் அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளித்தும் வருகின்றனர்.

மேலும், சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு Good Touch, Bad Touch உள்ளிட்ட அனைத்து விழிப்புணர்வுகள் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், போக்சோ வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதாகவும், போக்சோ வழக்குகளை கையாளும் முறை குறித்து இந்த வகுப்பை பயன்படுத்தி பங்கேற்றுள்ள அனைத்து காவல் துறையினரும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in