
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் சீமானுத்து அருகே உள்ளது நல்லிவீரன்பட்டி. இந்த ஊரில் இன்று காலை கோயில் திருவிழா நடைபெற்றது. பகல் 11.30 மணி அளவில் திடீரென அந்த ஊரில் குண்டு வெடித்ததுபோல பயங்கரமான சத்தம் கேட்டது. திருவிழாவில்தான் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று ஊர் மக்கள் பீதியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கரும்புகை மூட்டம் கிளம்பிய பகுதியைப் பார்த்து, குடியிருப்பு பகுதியில் வெடிவிபத்து நடந்திருப்பதை மக்கள் உறுதிசெய்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர்.
விசாரணையில், அந்த ஊரைச் சேர்ந்த காத்தம்மாள் என்பவரது வீட்டில் வெடிவிபத்து நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. இடிந்து தரைமட்டமான அந்த வீட்டில் இருந்து ஒரு பெண்ணும், அவரது 6 மாத கைக்குழந்தையும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இன்னொருவரின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. விசாரணையில் அவரது பெயர் அஜித்(25) என்பதும், சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளிலும் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் மொத்தமாக பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தில் காயமடைந்த விபிதா(22), அவரது மகள் ஹர்சிதா ஆகியோர் உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இறந்த அஜித்தின் சொந்த ஊர் செக்கானூரணி. அவர் திருவிழாவுக்காக பட்டாசு தயாரித்தாரா அல்லது இதையே தொழிலாகச் செய்துவந்தாரா என்றும் விசாரணை நடக்கிறது.