பாளையங்கோட்டை சிறையில் `தலைவர்' அடைப்பு: தொண்டர்கள் சோகம்

பாளையங்கோட்டை  சிறையில் `தலைவர்' அடைப்பு: தொண்டர்கள் சோகம்

மத உணர்வுகளைப் புண்படுத்தும்வகையில் பேசியதாகக் கைதுசெய்யப்பட்ட இந்து மகாசபா மாநிலத் தலைவர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருந்தார். சற்றுமுன் அவர் மருத்துவ சிகிச்சை முடிந்து, பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

அகில பாரத இந்து மகாசபாவின் தமிழகத் தலைவராக இருப்பவர் த.பாலசுப்பிரமணியன். அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது இந்த அமைப்புதான். ஆனால் தீர்ப்பின் வெற்றியை பாஜகவே உரிமை கொண்டாடிவிட்டதாக தொடர்ந்து பாஜகவை விமர்சிப்பதோடு, பாஜகவுக்கு எதிராக இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைத்து தேர்தலையும் அகில பாரத இந்து மகாசபா சந்தித்து வருகின்றது. தொடர்ந்து மத ரீதியாக இயங்கிவருவதால் த.பாலசுப்பிரமணியனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் உண்டு.

இந்நிலையில் இந்து மகாசபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி காவல்நிலைய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்த அவரது வீட்டில் வைத்து இருநாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 17-ம் தேதி, குமரிமாவட்டம் காப்புக்காடு பகுதியில் நிர்வாகிகள் கூட்டத்தில் த.பாலசுப்பிரமணியன் மத உணர்வைத் தூண்டும் வகையில், இஸ்லாமியர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டும் வகையிலும் பேசியதாக தக்கலை டி.எஸ்.பி கணேசன், புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீஸார் அவரை இருவாரங்களுக்கு சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அகில பாரத இந்துமகா சபா மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பல்வேறு இந்து இயக்கத்தின் தலைவர்களும் நேரில் சென்று சந்தித்து வந்தனர். பாஜகவோடு, அகில பாரத இந்துமகா சபாவுக்கு கருத்து முரண்பாடு இருந்தாலும், பாஜக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட பலரும் நேரில் போய் சந்தித்தனர்.

இந்நிலையில் த.பாலசுப்பிரமணியனின் உடல்நிலை இன்று சீரானது. இதனால் அவரை மருத்துவமனையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். இந்து மகாசபா மாநிலத் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அக்கட்சியின் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in