
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் நேற்று தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு பங்கேற்ற விழாவில் திமுகவினர் செருப்பணிந்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட திமுகவினர் பலரும் செருப்பு அணிந்தவாறு கலந்து கொண்டனர் என்று இந்து முன்னணியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது புனிதத்தைக் கெடுக்கும் செயல் என்றும், இதை தடுக்காத அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபுவை கண்டித்தும், இந்து கோயில் மாண்பைக் கெடுக்கும் இந்து சமய அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும். செல்லியம்மன் கோயிலின் செயல் அலுவலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்து முன்னிணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது செயல் அலுவலர் இல்லாததால் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து வேறு அதிகாரியை வரவழைத்து அவரிடம் மனு அளித்தனர்.
நேற்று மாலை நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் படாததற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திமுகவினர் கோயிலுக்குள் செருப்பணிந்து சென்றதாக இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம்: வி.எம்.மணிநாதன்.