`பதிவேடுகள் தமிழில் இருப்பதே நியாயமானது'- ஜிப்மரின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை எரிப்புப் போராட்டம்

ஜிப்மர் மருத்துவமனை
ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் பதிவேடுகள் அனைத்தையும் இந்தியில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என ஜிப்மர் நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுற்றறிக்கையை எரிக்கும் போராட்டத்தை தமிழ் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த 29.04.2022 அன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால், இந்திய நாடாளுமன்ற ஆய்வுக்குழுவினரைக் காரணம் காட்டி, ஜிப்மரில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, இனி வருங்காலத்தில் அவற்றை இந்தியில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். இந்தியில் மருத்துவ நூல்களே இல்லாத நிலையில், ஜிப்மருக்காக வாங்கப்படும் மருத்துவ நூல்களில் 50 விழுக்காடு இந்தியில் இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே, ஜிப்மரில் இந்திக்காரர்களும் வெளி மாநிலத்தவரும் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காகவும், தமிழரிடையே இந்தியைத் திணிக்க வேண்டுமென்றும் இச்சுற்றறிக்கை திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஒன்றியத்தின் அலுவல் மொழி தமிழே என புதுச்சேரி அரசு தமிழ் அலுவல் மொழிச் சட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒன்றியப் பகுதிக்குள் செயல்படும் ஜிப்மர் நிர்வாகம் அதனை மதித்து - தமிழையே அலுவல் மொழியாகச் செயல்படுத்த வேண்டும். தமிழர்களின் வேளாண் நிலங்களும், வனங்களும் அழிக்கப்பட்டு, அதன் மீதே ஜிப்மர் மருத்துவமனை எழுப்பப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையின் பயனாளிகளும் தமிழர்களே! எனவே, ஜிப்மர் மருத்துவமனையின் கோப்புகளும், பதிவேடுகளும் தமிழில் இருப்பதே சரியானது; நியாயமானது!

ஜிப்மர் நிர்வாகம், இந்தித் திணிப்பு வெறியுடன் வெளியிட்டுள்ள இச்சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! ஜிப்மரில் 90 விழுக்காட்டினருக்கு மேல் பணியில் உள்ள இந்திக்காரர்கள், மலையாளிகள் உள்ளிட்ட அனைத்து வெளி மாநிலப் பணியாளர்களையும் வெளியேற்ற வேண்டும் என்றஇக்கோரிக்கைகளை வலியுறுத்தி, சுற்றறிக்கை நகலை எரித்துப் போராட்டம் நடைபெறும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in