அமித்ஷாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள்: நீதிபதிகள் காட்டிய அதிரடி!

அமித்ஷாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள்: நீதிபதிகள் காட்டிய அதிரடி!

புதுச்சேரி நகராட்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 24-ம் தேதி புதுச்சேரிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கில் சட்டவிரோதமாக பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டதாகவும், அவற்றை அகற்றக்கோரி புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம், தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேனர்கள் அகற்றப்பட்டதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேனர்களை அகற்றியதற்கான செலவுகளைச் சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பேனர்கள் அகற்றப்படவில்லை என ஜெகனாதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரியில் சட்ட விரோதமாக 2,500 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் , இவற்றில் ஒப்பந்த முறையில் ஒப்பந்ததாரர்களால் வைக்கப்பட்ட பேனர்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகளால் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படவில்லை எனக் கூறி, மனுதாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, சட்ட விரோதமாக பேனர் வைப்பது உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என தெரிவித்த நீதிபதிகள், அவற்றை அகற்ற வேண்டுமெனவும், அவற்றை அகற்றியது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in