`ஆபாச அசைவு, வசனங்கள் இருக்கக்கூடாது'- ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

`ஆபாச அசைவு, வசனங்கள் இருக்கக்கூடாது'- ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு 2019-ம் ஆண்டில் டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கை அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை தென்பழஞ்சியை சேர்ந்த தங்கமாயன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "மதுரை தென்பழஞ்சி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனால் குதிரை எடுப்பு திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக டிஜிபி 9.4.2019-ல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்பதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தகவல்களுடன் 15 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும். மனு அளித்த நாளிலிருந்து ஒரு வாரத்தில் முடிவு தெரிவிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் ஆபாசமான அசைவுகள், வசனங்கள் இருக்க கூடாது. சாதி, மத, இன, மொழி அடிப்படையில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நிகழ்ச்சியை போலீஸார் எந்த நேரமும் நிறுத்தலாம். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் அனுமதி வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி காவல் ஆய்வாளரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். காவல் ஆய்வாளர் டிஜிபியின் சுற்றறிக்கை அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in