இன்று எச்சரிக்கை... நாளை முதல் அபராதம்: களமிறங்கியது போக்குவரத்து போலீஸ்

இன்று எச்சரிக்கை... நாளை முதல் அபராதம்: களமிறங்கியது போக்குவரத்து போலீஸ்

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பலர் ஹெல்மெட் அணியாததால் அவர்களை எச்சரித்து காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். நாளை முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாததே. பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவதில்லை. இது தொடர்பாக காவல் துறையினரும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனம் மூலமாக 841 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள் என சென்னை போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு சென்னை பெருநகர பகுதிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல் துறையின் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை பிடித்த காவல் துறையினர், அவர்களை எச்சரித்து அனுப்பினர். நாளை முதல் அபராதம் விதிக்கப்படும் என்று காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விபத்திலா நகரை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in