பிரம்மாண்ட திருமண மண்டபம்... மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம்!

அறநிலையத் துறையின் அரிய சேவை
பிரம்மாண்ட திருமண மண்டபம்... மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம்!
தோவாளையில் உள்ள அறநிலையத் துறை மண்டபம்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கிராமத்தில் அறநிலையத் துறை சார்பில் நிர்வகிக்கப்படும் புதிய, பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் இந்த அரிய சேவை பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

குமரி மாவட்டம், தோவாளையில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில், இதே பகுதியில் கிருஷ்ணசுவாமி கோயில் திருமண மண்டபமும் அமைந்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இந்த கல்யாண மண்டபம் கட்டப்பட்டது. மணமேடை, மணமக்கள் அறை, அதிகப்படியான இருக்கை வசதி, பிரம்மாண்டமான சமையல் கூடம், பரிமாறும் அறை என இந்த மண்டபத்தில் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரேநேரத்தில் 250 பேர் இங்கே அமர்ந்து உணவருந்தும்வகையில் விரிவான வசதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான திருமண மண்டபங்களில் வாடகைக் கட்டணம் மிக அதிகம் என்பதால், எளிய மக்களும் பயன்படுத்தும்வகையில் குறைவான வாடகையில் இந்தக் கல்யாண மண்டபம் இயங்கி வருகிறது. அரசின், அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் மண்டபம் என்பதால் அரசு அறிவித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்த மண்டபத்தில் வாடகையாக ரூ.15,000ம், மின்சாரம் தடைபடும் நேரத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,500-ம், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுபோக பராமரிப்புக் கட்டணமும் சிறிய அளவில் தேவையைப் பொறுத்து வசூலிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் - அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் - அறிவிப்பு

இந்தக் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் திருமணத்தின் போது, மணமக்களில் யாரேனும் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு திருமண மண்டப வாடகை, ஜெனரேட்டர் செலவு, மின்சாரக் கட்டணம் ஆகியவை கிடையாது என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையை அவர் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியும், தங்களுக்குரிய ஆதார் அட்டை, குடும்பச் சான்று நகல், கல்யாண அழைப்பிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பித்து இலவசமாகவே திருமணம் செய்துகொள்ள முடியும். சுசீந்திரத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்க முடியும். அறநிலையத் துறையின் இந்த அரிய சேவை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.