`உங்கள் கணவர் இறந்துவிட்டார்'- அரசு அலுவலகத்திலிருந்து வந்த போன் காலால் பதறி வந்த மனைவி

`உங்கள் கணவர் இறந்துவிட்டார்'- அரசு அலுவலகத்திலிருந்து வந்த போன் காலால் பதறி வந்த மனைவி

சென்னை சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி கணபதி தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (54). இவர் சோழிங்கநல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று அலுவலகத்திற்கு சென்ற அவர் உடல் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தனலட்சுமிக்கு மண்டல அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்தனர்.

சிறிது நேரம் கழித்து கணவர் இறந்து விட்டதாகவும் ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளதாக தனலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த தனலட்சுமி உடனே மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது சத்தியமூர்த்தி இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து தனலட்சுமி, கணவர் சத்தியமூர்த்தி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே உயிரிழந்த சத்தியமூர்த்தி ஒழுங்காக பணிக்கு வராததால் நேற்று முன்தினம் அதிகாரிகள் அவருக்கு மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சத்திய மூர்த்தி நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். நேற்று இரவு அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் சத்தியமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து இறந்து போன சத்தியமூர்த்தியின் மகள் பிரீத்தி கூறுகையில், "எனது தந்தை சத்திய மூர்த்தி சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பணியாற்றி வந்தார். வீட்டில் இருந்து அலுவலகம் வெகு தொலைவில் உள்ளதால் பணி இடமாற்றம் வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால் இடமாற்றம் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் தந்தை இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. என் தந்தை எப்படி இறந்து போனார் என்பது தெரியவில்லை. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். மேலும் மண்டல அலுவலக அதிகாரிகள் உரிய முறையில் எந்த தகவலையும் அளிக்கவில்லை. ஆட்டோவில் தான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். என் தந்தை மரணத்தில் சந்தேகம் உள்ளது. காவல்துறை இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்" என கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in