அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து தாய், பச்சிளம் குழந்தை காயம்!

அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து தாய், பச்சிளம் குழந்தை காயம்!
அந்தக் கட்டில்

விருதுநகர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பழுதடைந்த கட்டில் உடைந்து, தாயும், பச்சிளம் குழந்தையும் காயமடைந்தனர். இதில், குழந்தைக்கு தலையில் பலமாக அடிபட்டதால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறது.

விருதுநகர் அருகே உள்ள பரங்கிரிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி, மனைவி முத்துலட்சுமி. இவர் இரண்டாவது பிரசவத்துக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 24-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைபெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்ததால், அவர் தொடர்ந்து மகப்பேறு பிரிவிலேயே இருந்தார்.

இந்த நிலையில், நேற்று (திங்கள்) மாலையில் தாயும் குழந்தையும் மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தபோது, திடீரென்று கட்டில் உடைந்துவிழுந்தது. இதில் அவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.

குழந்தையின் தலையில் அடிபட்டதால் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். அப்போது தலைக்குள் ரத்தக் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தாயும் சேயும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உள்ள பல கட்டில்கள் துருப்பிடித்த நிலையில் இருப்பதாகவும், அதனால் இப்படியான விபத்துகள் சகஜமாக நடப்பதாகவும் இங்கு வந்து போகும் நோயாளிகள் தரப்பில் புகார் கூறினர்.

இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவமனை முதல்வர் சங்குமணியிடம் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டபோது, "பிறந்த குழந்தையை பார்க்க வந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் அதே கட்டிலில் அமர்ந்துள்ளனர். அதிக எடை காரணமாக கட்டில் உடைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த, உறைவிட மருத்துவர் டாக்டர் முருகேசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மொத்தம் 30 படுக்கைகள் உள்ளன. அத்தனை படுக்கைகளும் உறுதியாக உள்ளதா என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையின் நிலை குறித்து விசாரித்தோம். நல்ல நிலையில் இருக்கிறது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை சிகிச்சை பெற்றுவருகிறது" என்றார்.

Related Stories

No stories found.