ஒரு கல்... ஒரு கண்ணாடி... 100 பிரச்சினைக்குத் தீர்வாகுமா?

மதுரை ஒத்தக்கடை அருகே மாணவர்களால் கல் வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட அரசுப் பேருந்து.
மதுரை ஒத்தக்கடை அருகே மாணவர்களால் கல் வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட அரசுப் பேருந்து. படம்: கே.கே.மகேஷ்

மதுரை மாவட்டத்தில் இன்றும் ஓர் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது. உடைத்தவர்கள் பள்ளி மாணவர்கள். காரணம், வழக்கம்போல பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றது.

சம்பவம் நடந்த இடமான மதுரை திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள யா.கொடிக்குளம் பாலம் பேருந்து நிறுத்தத்தில் நேரில் விசாரித்தபோது, நிறைய பிரச்சினைகளைச் சொல்கிறார்கள் மக்கள்.

"முன்பு மேலூர் மதுரை இடையே நிறைய நகர்ப்பேருந்துகள் இயக்கப்பட்டன. கரோனா காலத்துக்குப் பிறகு நகர்ப்பேருந்துகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிட்டார்கள். குறிப்பாக பகல் 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரையில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து கூட வருவதில்லை. கொடும் வெயிலில் காத்திருந்து காத்திருந்து மயக்கமே வந்துவிடுகிறது. காரணம் கேட்டால், கலெக் ஷன் இல்லை என்கிறார்கள். காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என்று அவ்வளவு கூட்டம் இருக்கிறது. அப்போதும் குறைவான பேருந்துகளே வருகின்றன. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலேயே மிகமிக அதிக கட்டணம் வசூலிக்கும் மதுரை மாநகர தாழ்தளப் பேருந்துகள், எடப்பாடி காலத்தில் வாங்கப்பட்ட சிவப்பு வண்ணப் பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. இன்று நிறுத்தாமல் சென்றதால், மாணவர்களால் கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்தும் அதே சிவப்பு வண்ணப் புதிய பேருந்துதான்" என்றார்கள்.

மதுரை சாலைகளை ஆக்கிரத்திருக்கும் அனுமதி பெறாத ஷேர் ஆட்டோக்கள்.
மதுரை சாலைகளை ஆக்கிரத்திருக்கும் அனுமதி பெறாத ஷேர் ஆட்டோக்கள்.படம் ஜி.மூர்த்தி

மாணவர்கள் தரப்போ, "ஒரு பஸ்சில் கூட்டமாக இருந்தால் அடுத்த பஸ்சில் வர வேண்டியதுதானே? என்று நடத்துனர்கள் எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். அடுத்த பேருந்து கொஞ்சம் தாமதமானாலும், பள்ளிக்குச் சரியான நேரத்தில் போக முடியாமல் போய்விடுகிறது. 'உங்களுக்குத் தினமும் இதே வேலைதான்' என்று ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியதிருக்கிறது" என்கிறார்கள்.

அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலர்களிடம் இதுபற்றிக் கேட்டபோது, "மதுரையில் தேவைக்கு அதிகமாக, டீசல் ஆட்டோக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றன. 80 சதவீத டீசல் ஆட்டோக்களை சட்டவிரோதமாக ஷேர் ஆட்டோவாக இயக்குகிறார்கள். மதுரையில் பேருந்து கட்டணம் மிக அதிகம் என்பதால், மக்கள் ஷேர் ஆட்டோக்களில் ஏறிச்சென்றுவிடுகிறார்கள். இதனால் எங்களுக்கு கலெக் ஷன் குறைகிறது. ஏற்கனவே டீசல் விலை வேறு தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அதனால் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதாகிறது. கடைசியில், இப்படியான பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறோம்" என்கிறார்கள்.

இன்னொரு புறம் ஷேர் ஆட்டோக்களால் மதுரையில் விபத்துக்களும், அடிதடி சண்டைகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இப்படி ஒரு கல்லுக்குப் பின்னால் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசுப் போக்குவரத்துக் கழகம், கல்வித்துறை, காவல்துறையுடன் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து இப்பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும்.

இல்லை என்றால், இன்னொரு கல், இன்னொரு கண்ணாடியை உடைத்துக்கொண்டேதான் இருக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in