ஒட்டுநர் புகார்: பயணச்சீட்டு ஆய்வாளர்கள் மீது வழக்குப்பதிவு!

ஒட்டுநர் புகார்: பயணச்சீட்டு ஆய்வாளர்கள் மீது வழக்குப்பதிவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின்பேரில் பயணச்சீட்டு ஆய்வாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குமரி மாவட்ட போக்குவரத்துத் துறை பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி மேலகலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் நாகர்கோவில்_அருமநல்லூர் வழித்தடத்தில் இயங்கும் டீலக்ஸ் பேருந்தின் ஓட்டுநராக பணியில் இருக்கிறார். இந்த வழித்தடத்திலேயே திட்டுவிளை என்னும் ஊர் இருக்கிறது. இங்கு பேருந்து நிலையமும் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்வதற்கு ஒரு பாதையும், வெளியே வருவதற்கு மற்றொரு பாதையும் உள்ளது. செல்வகுமார் ஓட்டும் டீலக்ஸ் பேருந்து, பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் உள்ளே செல்லும் வழியாகச் செல்லும்போது பம்பர் தட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து டீலக்ஸ் பேருந்துகளுமே திட்டுவிளை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வெளியேறும் வாசல் வழியாகவே உள்ளேயும், வெளியேயும் சென்று வருகின்றன.

இன்று ஓட்டுநர் செல்வகுமாரும் பேருந்து வெளியேறும் வாசல் வழியே பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணச்சீட்டு ஆய்வாளர்கள் மனோகரன், குமரேசன் ஆகியோர் பேருந்தை தடுத்து நிறுத்தினர். பேருந்து வெளியேறும் வாசல் வழியே செல்வகுமார் உள்ளே வந்தது ஏன் என கண்டித்தனர். உடனே செல்வகுமார், டீலக்ஸ் பேருந்துகளில் பம்பர் தட்டும் என எடுத்துக் கூறியிருக்கிறார். தனக்கு முன்பு ஒருமுறை அப்படி தட்டியது எனவும் விளக்கியிருக்கிறார்.

அப்படியும் ஆய்வாளர்கள் இருவரும் அவரிடம் கடுமைகாட்டினார்களாம். இதையடுத்து, தன் தரப்பு நியாயத்தை சொல்ல முயற்சித்ததால் தன்னை பயணச்சீட்டு ஆய்வாளர்கள் இருவரும் கடுமையாக எச்சரித்து மிரட்டியதாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் செல்வகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் பயணச்சீட்டு ஆய்வாளர்கள் மனோகரன், குமரேசன் இருவர் மீதும் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.