அரிசி மூட்டைக்குள் வைக்கப்பட்ட 47 சவரன் தங்கம்... வியாபாரிக்கு அரிசியை விற்ற தாயார்: பதறிய பெண் பொறியாளர்

அரிசி மூட்டைக்குள் வைக்கப்பட்ட 47 சவரன் தங்கம்... வியாபாரிக்கு அரிசியை விற்ற தாயார்: பதறிய பெண் பொறியாளர்

வைக்க தெரியாதவர்கள் வைக்கோல் போரில் வைத்த கதையாக ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர், வீட்டிலிருந்த அரிசி மூட்டைக்குள் தன்னுடைய தங்க நகைகளை மறைத்து வைத்திருக்க, தங்கம் இருப்பது தெரியாமல் அந்த அரிசி மூட்டைகளை விற்றிருக்கிறார் அப்பாவித் தாய் ஒருவர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையை அடுத்த காந்திகிராமம் ராமலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி ( 62 ). இவருடைய மகள் கனிமொழி ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய ஊதியத்தை சேமித்து வைத்து அதன்மூலம் தங்க நகைகளை வாங்கி சேமித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கனிமொழி தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது தான் வாங்கி வைத்திருந்த 47.5 சவரன் தங்க நகைகளையும் வீட்டில் உள்ள அரிசி மூட்டையின் உள்ளே பாதுகாப்பாக வைத்துவிட்டு ஹைதராபாத்துக்கு சென்று விட்டாராம். இது சரஸ்வதிக்கு தெரியாததால் வீட்டில் இருக்கும் அரிசியில் தனது குடும்ப தேவைக்கு போக மீதத்தை வெளி நபர்களிடம் சரஸ்வதி விற்றுவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தனது தாயை தொடர்பு கொண்ட கனிமொழி வீட்டில் உள்ள அரிசி மூட்டைக்குள் 47.5 சவரன் தங்க நகைகளை வைத்திருப்பதாகவும், அதனை பத்திரமாக பாதுகாக்கும் படியும் கூறியுள்ளார். அதைக்கேட்ட சரஸ்வதி அதிர்ந்து போயுள்ளார். அந்த மூட்டையை 2 பேருக்கு விற்று விட்டதாக அழுதபடியே சரஸ்வதி கூறியதைக் கேட்ட கனிமொழி, பதறிப்போய் தாயை திட்டியுள்ளார்.

இதனையடுத்து சரஸ்வதி தன்னிடம் அரிசி மூட்டையை வாங்கிச் சென்ற மனோஜ், விமலா ஆகிய இரண்டு பேரிடமும் போய் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தாங்கள் வாங்கியதில் அரிசி மட்டுமே இருந்ததாகவும், தங்கம் எதுவும் இல்லை என்றும் மறுத்துள்ளனர். அதனையடுத்து தாந்தோனிமலை காவல் நிலையத்தில் சரஸ்வதி இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தங்க நகை மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரிடமும் தாங்கள் வாங்கிய அரிசியில் நகைகள் எதுவும் இல்லை என்பதை அந்த இருவரும் அழுத்தம் திருத்தமாக கூறி விட்டனர்.

உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய நகையை, இப்படி வைக்கத் தெரியாமல் வைத்ததால் தற்போது அதை இழந்து வாடுகிறது அந்த ஏழைக் குடும்பம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in