
சுற்றுச்சூழலை பாதுகாக்க தேவைப்படும் நடவடிக்கைகளை வனத்துறையினர் முன்னுரிமை அளித்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வனப்பகுதியில் தடுப்பு சுவரால் யானைகள் விழும் வீடியோ காட்சி வைரலானது. இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஸ்குமார் ஆகியோர் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து விசாரித்தனர். வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா ஷாஹூ, யானைகள் இயற்கை மரணம் மற்றும் ரயிலில் அடிப்பட்டு இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அறிக்கை சமர்பித்தார். மேலும், குன்னூர் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கும் வீடியோவை நீதிபதிகள் பார்த்தனர்.
அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், மலைப்பகுதியில் மது விற்பனை செய்ய ஏன் தடை விதிக்ககூடாது என்று கேள்வி எழுப்பியதோடு, மலைப்பகுதியில், மது புழக்கத்தை கட்டுப்படுத்த மாற்றுவழி ஏதேனும் உண்டா என்பது குறித்தும் வனவிலங்குகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். மேலும், ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகள் குன்னூர் வனப்பகுதி, உதகை, முதுமலை பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம் என்று உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில், நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஸ்குமார், எம்.தண்டபாணி, ஆர்.பொங்கியப்பன், ஜி.கே.இளங்தரையன் ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்தனர். உதகை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தானியங்கி தண்ணீர் ஏடிஎம்களை பார்வையிட்டு, தண்ணீர் அருந்தி அதன் தரத்தை ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித்திடம் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
உதகை அருகே வென்லாக் பள்ளத்தாக்குப் பகுதியை பார்வையிட்ட பின் மரங்களை நட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய நீதிபதிகள், %நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதால் அண்டை மாவட்டங்களின் நீர் தேவை பூர்த்தியாகிறது. இதில் நீலகிரியின் பங்கு மிகவும் முக்கியமானது" என்றனர். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால் அதற்கு தயக்க வேண்டாம் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, "நீலகிரி மாவட்டத்தில் இயற்கை காடுகளை பாதுகாப்பதோடு, வனத்துறைக்கு வருவாய் ஈட்டும் வகையில் வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்" என்றார்.
பின்னர், முதுமலை புலிகள் காப்பகம் சென்றனர். அங்கு உண்ணிச்செடிகள் மற்றும் பார்தீனியம் செடிகளை அகற்றும் பணியை பார்வையிட்ட நீதிபதிகள், முதுமலை யானைகள் முகாமில் ‘ஸ்லைடு ஷோ’ பார்த்தனர். பின்னர் கார்குடியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் களை எடுக்கும் பணியை பார்வையிட்டனர். நாளை குன்னூர் பகுதியில் யானைகள் வழிதடத்தை பார்வையிடும் நீதிபதிகள் பின்னர் வால்பாறை புறப்பட்டு செல்கின்றனர்.