புதுச்சேரியில் முழு அடைப்பு ஏன்?

புதுச்சேரியில்  முழு அடைப்பு  ஏன்?
புதுச்சேரி நேரு வீதியில் அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்

புதுச்சேரியில் இன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் மக்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியில்லாமலும் தவிக்கின்றனர்.

புதுவையில் அடைக்கப்பட்டு இருக்கும் கடைகள்
புதுவையில் அடைக்கப்பட்டு இருக்கும் கடைகள்

இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம், புதுச்சேரியில் இன்று தீவிர நிலையை எட்டியுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தொழிற்சங்கங்களின் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றன. நேற்று பெரும்பாலான மாநிலங்களில் அரசு பேருந்துகள் உட்பட பல்வேறு அரசுத்துறை நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவே இயங்கின.

தமிழகம், புதுச்சேரியில் மிகக் குறைவான அளவாக 30 சதவீதத்துக்கும் குறைவான பேருந்துகளே இயங்கின. மற்ற அரசுத்துறை நிறுவனங்களில் மிகக் குறைந்த அளவே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இரண்டாம் நாளான இன்று 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கினாலும் புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் மிகக் குறைவாகவே இயங்குகின்றன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு காரணம், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மறியலில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெறுவதாகக் எதிர்க் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்புடன் குறைவான அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள்
போலீஸ் பாதுகாப்புடன் குறைவான அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள்

இதன் காரணமாக, புதுச்சேரியில் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் எந்தப் பகுதியிலும் சிறு கடைகள் கூட திறக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளும் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் குறைவான அளவில் உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.


படங்கள்: எம் சாம்ராஜ்

Related Stories

No stories found.