480 வீடுகள் கட்டாமலே பயனாளிகளுக்கு 7 கோடி பட்டுவாடா: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

480 வீடுகள் கட்டாமலே பயனாளிகளுக்கு 7 கோடி பட்டுவாடா: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்ததை அடுத்து அது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் கடந்த 2016-ல் இருந்து 2020-ம் ஆண்டு வரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் சுமார் 1,800 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அது குறித்த கணக்குகள் ஊரக வளர்ச்சி துறையின் வசம் உள்ளது. ஆனால், அதில் பல வீடுகள் கட்டாமலே பணம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் இருந்து ஆட்சியருக்கு புகார்கள் வந்தன.

அந்த புகார்களின் அடிப்படையில் தனியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விசாரணை நடத்தினார். அதில், சுமார் 480 வீடுகள் கட்டாமலே, பயனாளிகளுக்கு ரூ.7 கோடி பணம் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கால கட்டத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 25 பேருக்கு விளக்கம் கேட்டு ஆட்சியர் கவிதா ராமு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், வீடுகள் கட்டப்படும் இடங்களை நேரில் சென்று பார்க்காமலும், ஆவணங்களைச் சரிபார்க்காமலும் எவ்வாறு பயனாளிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது? இதில் எந்தந்த அலுவலர்களுக்கு தொடர்பு இருக்கிறது? மோசடி எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று, கந்தர்வக்கோட்டை ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் 9 பேருக்கு வீடு கட்டாமலே, அதற்குரிய ரூ.17.7 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அந்த காலகட்டத்தில் பணிபுரிந்த 15 பேர் மீது புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் 2 மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in