திடீரென எகிறிய டீசல் விலை: தொழிலைப் புறக்கணித்த மீனவர்கள்


திடீரென எகிறிய டீசல் விலை: தொழிலைப்  புறக்கணித்த  மீனவர்கள்
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்

தங்கள் படகுகளுக்கு வழங்கப்படும் டீசலின் விலை 15 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பழையாறு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பழையாறு துறைமுகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதற்காக துறைமுகத்தின் வளாகத்திலேயே மீன் வளர்ச்சிக் கழகத்தால் டீசல் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த டீசல் விற்பனை நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென லிட்டர் ஒன்றுக்கு 15 ரூபாய் கூடுதலாக விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் பழையாறு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

தனியார் விற்பனை விலையில் இருந்து 20 சதவீதம் மானியம் வழங்கி மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும் என்பது அரசின் விதி. அதன்படி தற்போதய தனியார் விற்பனை விலை 1 லிட்டர் டீசல் ₹ 93.10 பைசாவாக உள்ளது. அதன்படி பார்த்தால் மானியம் போக ₹ 73.10 பைசா என்ற விலையில் மீனவர்களுக்கு டீசல் வழங்கப்பட வேண்டும். ஆனால் மீன்வளர்ச்சி கழகத்தின் துறைமுக டீசல் விற்பனை நிலையத்தில் 27 ரூபாய் கூடுதலாக 103 ரூபாய்க்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் மானியம் அல்லாத டீசல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே மீன்வளர்ச்சி கழகத்தின் இந்த தன்னிச்சையான விலை உயர்வை கண்டித்தும், மீண்டும் பழையபடி 73 ரூபாய்க்கு மானிய டீசல் வழங்க வலியுறுத்தியும் பழையாறு கிராம மீனவர்கள் 5,000 பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.

மீனவர்களின் போராட்டத்தால் 300 விசைப்படகுகள், 500 பைபர் படகுகள் மற்றும் 200க்கும் ஏற்பட்ட நாட்டு படகுகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in