இரவில் பற்றி எரிந்த நட்சத்திர ஓட்டல்... அலறிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்: திருச்சியில் பயங்கரம்

இரவில் பற்றி எரிந்த நட்சத்திர ஓட்டல்...  அலறிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்: திருச்சியில் பயங்கரம்

திருச்சியில் நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு பற்றிய தீ, அதில் தங்கி இருந்த பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் அவர்கள் அனைவரும் ஆபத்தில்லாமல் உயிர் பிழைத்தனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் லே டெம்பஸ் போர்ட் என்ற 3 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர். நேற்று இரவு 8.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக ஓட்டலின் நான்காவது மாடியில் உள்ள அலுவலகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை எதிர்பார்க்காத ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

அதன் புகை மூட்டம் 5-வது மாடிக்கும் பரவியது. ஓட்டல் முழுவதும் பரவிய புகையால் அதில் தங்கி இருந்த பயணிகள் பீதிக்கு உள்ளாகினர். தீப்பிடித்து இருப்பது தெரிந்ததும் அவர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு அறைகளை விட்டு வெளியேறினர். யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முழுமையாக வெளியேறினர்.

தீ விபத்து குறித்த அறிந்த திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்தினர் மூன்று வாகனங்களில் விரைந்துவந்து தீயை அணைக்க முற்பட்டனர். மின்மாற்றிகள், மின்சார வயர்கள் அப்பகுதியில் அதிகம் இருந்ததால் தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து மின்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்ததும், கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

நட்சத்திர ஓட்டலில் இரவில் பற்றிய தீயால் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவாறு முழுமையாக அணைக்கப்பட்டதால் திருச்சி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in