
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை கூடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணச்சநல்லூர் அரசு பொது மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளதால் எப்போதும் நோயாளிகளின் வருகை அதிகரித்து காணப்படும். புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளாக நூற்றுக்கணக்கான மக்கள் அன்றாடம் அந்த மருத்துவமனைக்கு வந்து செல்வார்கள்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் மேல்தளத்தில் அறுவை சிகிச்சைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு அறைகள் உள்ளன. இந்த அறுவை சிகிச்சைக் கூடத்தில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அங்கு வந்த நோயாளிகள் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று திறந்து பார்த்திருக்கின்றனர்.
அங்குள்ள அறுவை சிகிச்சைக் கூடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியபடி கிடந்துள்ளது. இதை கண்டு பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார், அந்த பெண் யார்? எப்போது மருத்துவமனைக்கு வந்தார்? அவரது மரணம் எப்படி நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை அறுவைக் சிகிச்சை கூடத்தில் பெண் ஒருவரின் சடலம் அழுகிப்போய் துர்நாற்றம் வீசும் அளவிற்கு கிடப்பதுகூட தெரியாமல் இத்தனை நாட்கள் இருந்தது எப்படி? மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் எப்படி அலட்சியமாக இருந்தனர்? இதற்கு யார் பொறுப்பு? என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து மருத்துவத்துறை சார்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.