தந்தை திடீர் மரணம்... இறுதிச் சடங்கிற்குப் பணம் இல்லாமல் கலங்கிய பிள்ளைகள்: அரவணைத்த கிராம மக்கள்!

தந்தை திடீர் மரணம்... இறுதிச் சடங்கிற்குப் பணம் இல்லாமல் கலங்கிய பிள்ளைகள்: அரவணைத்த கிராம மக்கள்!

இறந்த தந்தையின் இறுதிச்சடங்குகளைச் செய்யப் பணம் இல்லாமல் தவித்த சிறுவர்களுக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களே உதவி செய்து அடக்கம் செய்தனர். மேலும் கிராமத்தில் உள்ளவர்களே அந்த சிறுவர்களைத் தத்தெடுத்துப் படிக்க வைத்து அவர்களின் தரத்தை உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி உமாமகேஸ்வரி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கூலித் தொழிலாளியான இவருக்கு சக்திவேல், ரஞ்சித் ஆகிய மகன்களும், வரலட்சுமி என்ற மகளும் உள்ளனர். சக்திவேல் பிளஸ்-2 தேர்வும், ரஞ்சித் 10-ம் வகுப்புத் தேர்வும் எழுதியுள்ளனர். வரலட்சுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஜெயசீலன் திடீரென உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் செய்யப் பணம் இல்லாததால் மூவரும் செய்வதறியாது தவித்தனர். இதையறிந்த கிராம மக்களும் உறவினர்களும் ஒன்று திரண்டு பணம் வசூல் செய்து ஜெயசீலனின் உடலை அடக்கம் செய்தனர்.

பெற்றோர்களை இழந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான தகவல் அறிந்து ஆரணி தாசில்தார் தனபால் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் அந்த கிராமத்திற்கு வந்தனர். உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், மூன்று பேரையும் அரசு காப்பகத்தில் தங்க வைத்துப் படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் கூறினர். அதற்கு உறவினர்களும், கிராம மக்களும் சம்மதிக்கவில்லை. கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை நாங்களே படிக்க வைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து, அவர்களுக்கு உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக வருவாய்த்துறையினர் அவர்களிடம் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in