கூரை வீட்டில் வசித்து வந்தவர்: பிக்பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டி தரும் ரசிகர்கள்!

கூரை வீட்டில் வசித்து வந்தவர்: பிக்பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டி தரும் ரசிகர்கள்!
தாமரை செல்வி

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட தாமரைச்செல்விக்கு அவரது ரசிகர்கள் பணம் திரட்டி தற்போது வீடு கட்டி தருகின்றனர்.

புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழில் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்டார் தாமரைச்செல்வி. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி பிரபலங்கள், பாடகர்கள், வெளிநாட்டை சேர்ந்த மாடல்கள், நகைச்சுவை கலைஞர்கள், பிரபலம் இல்லாதவர்கள் என கலவையாக போட்டியாளர்களை தேர்வு செய்வார்கள்.

அந்த வகையில் கடந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் நாடக கலைஞராக கிராமத்திலிருந்து தாமரைச்செல்வி உள்ளே வந்தார். ஆரம்பத்தில் அவரது விளையாட்டில் தடுமாற்றம் இருந்தாலும் புரிந்துகொள்ள சிரமப்பட்டாலும் போகப்போக தாமரைச்செல்வி விளையாட்டினை நன்றாகவே விளையாடினார்.

பிக்பாஸ் சீசன் இறுதி வரை வந்தவர் பணப்பெட்டி எடுக்க வாய்ப்பு வந்தும் அதை தவிர்த்து விட்டு, இறுதி சுற்றுக்கு முன்னால் அவர் வெளியேற்றப்பட்டார். பணப்பெட்டியை எடுக்காமல் தவிர்த்ததற்கு காரணமாக, இந்த போட்டியில் கலந்து கொண்டதைவிட பிக்பாஸ் வீடு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் இங்கு இருப்பதை தான் விரும்புவதாகவும் அடிக்கடி நிகழ்ச்சியில் சொல்லி வந்தார். அடுத்ததாக பிக்பாஸ் ஓடிடியிலும் கலந்து கொண்டார்.

இப்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவரும் அவருடைய கணவர் பார்த்தசாரதியும் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

தாமரை செல்வியின் குடும்பம், சொந்த ஊரில் இருக்க வீடு இல்லாமல் கூரை வீட்டில் வசித்து வருவதை பற்றி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு பேட்டி வெளியானது. இதை பார்த்த அவருடைய ஆதரவாளர்கள் தாமரைச்செல்விக்கு வீடு கட்டித்தர வேண்டும் என பணம் திரட்டியுள்ளனர்.

இதற்கான உதவியை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடமும் நாட அவர் தாமரைச் செல்வியின் ரசிகர்களுக்கும் தாமரைச்செல்விக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து தாமரைச்செல்விக்கு வீடு கட்டித்தரும் பணியை அவரது ரசிகர்கள் சார்பாக முன்னெடுத்து செல்வதாக தன்னுடைய யூடியூப் சேனலில் தற்போது தெரிவித்திருக்கிறார்.

இதற்கான வீடியோ ஒன்றை தற்போது ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "தாமரைச் செல்வியின் குடும்பத்தையும் அவருடைய வீட்டையும் பேட்டியில் பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஒரு வீடு கட்டி தரவேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான பணத்தை திரட்டினர். 600 சதுர அடியில் ஒரு வீடு கட்டித்தர, திரட்டிய பணத்தை வைத்து முடிவு செய்தோம். அந்த வீட்டிற்கான வடிவமைப்பையும் பொறியியல் படித்த இளைஞர் ஒருவர் இலவசமாக செய்து தர முன் வந்தார்.

தற்போது அந்த வீடு பணியை ஆரம்பித்து இருக்கிறோம். தாமரைச் செல்வியின் சொந்த ஊரில் முன்னெடுக்கும் இந்த பணி குறித்து ஒவ்வொரு வாரமும் வீடு எந்த நிலையில் உள்ளது என்பதை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். தாமரை செல்வியும் அவரது குடும்பத்தினரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மகிழ்ச்சியில் உள்ளனர். வீட்டிற்கு 'தாமரை இல்லம்' என பெயர் சூட்ட இருக்கிறோம். உங்களுக்கும் இது போல உதவி செய்ய விருப்பம் இருந்தால் அது குறித்து என்னுடன் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.