குழித்துறை ரயில் நிலைய விரிவாக்கம்: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா?

எதிர்பார்ப்பில் ரயில் பயணிகள்
குழித்துறை ரயில் நிலைய விரிவாக்கம்: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா?
குழித்துறை ரயில் நிலையம்

குழித்துறை ரயில் நிலையப் பணிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘திருவனந்தபுரம் - கன்னியாகுமரி 87 கி.மீ தூரம் கொண்ட ரயில் வழித் தடத்தில், இருவழிப்பாதை திட்டத்தைச் செயல்படுத்த ஆய்வு செய்யப்படும்’ என்று 2005-06-ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு ரேட் ஆப் ரிட்டன் 0.77 எனவும் திட்டம் செயல்படுத்த ரூ.526 கோடிகள் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டது. ரேட் ஆப் ரிட்டன் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர், இந்த திட்டத்துக்கு மீண்டும் 2013-14-ம் ஆண்டு தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது ரேட் ஆப் ரிட்டன் 7.03 சதவீதம் கிடைக்கும் என்றும், இந்த திட்டம் செயல்படுத்த ரூ.617 கோடிகள் வரை செலவாகலாம் என்றும் கணக்கிடப்பட்டது.

இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட இருவழிப்பாதைக்கு, ஒப்புதல் அளித்து பணிகளை தொடங்க வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் 2015-16-ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கன்னியாகுமரி–திருவனந்தபுரம் 87 கி.மீ தூரம் கொண்ட இருவழிப்பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. திருவனந்தபுரம் - கன்னியாகுமரி 87 கி.மீ தூரம் இருவழித் தடம் திட்டத்தை தெற்கு ரயில்வேயின்கீழ் உள்ள கட்டுமானப் பிரிவின் எர்ணாகுளம் அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் வருவாய் அடிப்படையில் 3-வது பெரிய ரயில் நிலையம் குழித்துறை. வருவாய் அடிப்படையில் இந்நிலையம் என்எஸ்ஜி-5 பிரிவு (பழைய நிலை பி) ரயில் நிலையமாக உள்ளது. இந்த இரயில் நிலையத்தின் 2019-20-ம் ஆண்டு வருவாய் ரூ.7 கோடியே 32 லட்சத்து 87 ஆயிரத்து 446. சராசரியாக தினமும் 5,000 பயணிகள் இந்த இரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

குழித்துறை ரயில் நிலையம்
குழித்துறை ரயில் நிலையம்

இந்த ரயில் நிலைய மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்புகின்றனர் குழித்துறை ரயில் பயணிகள் சங்கத்தினர். இதுகுறித்து, சங்கத்தின் செயலாளர் சார்லஸ் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் இருந்தபோதிலும், குழித்துறை ரயில் நிலையத்துக்கு சரியான அகலமான அணுகல்சாலை கூட இல்லை. எனவே குழித்துறை ரயில் நிலையத்துக்கு தனியாக நல்ல அகல அணுகுசாலை தேவை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 1982-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அப்போதைய எம்.பி டென்னீஸ் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இன்றுவரை இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தற்போது கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை இரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தின்படி அவர்கள் நிச்சயமாக இந்த நிலையத்தை மறுவடிவமைப்பார்கள். அப்போது, பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி இந்த ரயில் நிலையத்தில் சில அத்தியாவசியமான பணிகளைச் செய்ய வேண்டும்.

குழித்துறை இரயில் நிலையம் 4 பாதைகள் கொண்ட இரயில் நிலையமாக மாற்றம் செய்யப்பட வேண்டும். பள்ளியாடி பகுதியில் மழைகாலங்களில் மண் இடிந்து வழக்கமாகவே ரயில் போக்குவரத்து பாதிப்படைகின்றது. இதனால் வருங்காலங்களில் ரயில்சேவை பாதிக்கும்போது ரயில்களை நிறுத்திவைக்க குழித்துறை ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் அமைக்கவேண்டும். நிலைய அதிகாரி கட்டிடம் மற்றும் இரயில் நிலைய நுழைவு வாயிலை நாகர்கோவில் - திருவனந்தபுரம் பாதையின் நடைமேடை இரண்டில் பல்லன்விளை பகுதியில் அமைத்து, பயணிகளுக்குத் தேவையான காத்திருப்போர் அறை, கழிப்பிடம், குளிர்சாதன அறை, அதிக கவுன்ட்டர்கள் உள்ள முன்பதிவு மையம்,பெண்களுக்கு தனி காத்திருப்போர் அறை, உணவகம், தேநீரகம், புத்தக விற்பனை நிலையம் என அனைத்தும் அமைக்க வேண்டும்.

இரயில் நிலையத்தின் தற்போதைய பிளாட்பாரங்கள் வளைந்து காணப்படுகிற காரணத்தால் பாதுகாப்புக்காகவும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு பிளாட்பாரங்களை திருவனந்தபுரம் பாதைநோக்கி 50 முதல் 100 மீட்டர் வரை நீட்டித்து அமைக்கவேண்டும்.

இரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள நல்லூர் வழியாகதான் 4 வழிச் சாலை செல்கிறது. ஆகவே, இரயில் நிலையத்தை 4 வழிச் சாலையுடன் இணைக்கும் விதமாக, நல்லூர் வரை ஏற்கெனவே உள்ள குறுகிய சாலையை விரிவான இணைப்புச் சாலையாக அமைக்க வேண்டும். இதற்கெல்லாம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்” என்றார் அவர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in