செல்ஃபி எடுத்த இளைஞர்கள்... துரத்திய யானைகள்... நீலகிரி வனத்தில் திக் திக் நிமிடங்கள்

செல்ஃபி எடுத்த இளைஞர்கள்... துரத்திய யானைகள்... நீலகிரி வனத்தில் திக் திக் நிமிடங்கள்

நீலகிரி மாவட்டத்தில் சாலையை கடக்கும் யானைகள் மற்றும் வனவிலங்குகளிடம் ஆபத்தை உணராமல் செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் அத்துமீறுகின்றனர். வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள், அதிவேகமாக வாகனத்தை இயக்குவதுடன், வன விலங்குகள் அருகில் நின்று செல்ஃபி எடுப்பது, உணவளிப்பது, வன விலங்குகளைப் புகைப்படம் எடுப்பது, பிளாஸ்டிக் குப்பைகளை ரோட்டில் தூக்கி எறிவது, வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி உணவு சமைப்பது எனப் பல்வேறு வகையில் அத்துமீறி நடந்துகொள்கின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த வாரம் வந்த 10 காட்டு யானைகள் கல்லாறு, பர்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாமிட்டிருந்தன. இவை தற்போது கரும்பாலம், கிளன்டேல், ரன்னிமேடு போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையைக் கடக்கின்றன. குறிப்பாக காட்டேரி கரும்பாலம் பகுதியில் சாலையைக் கடந்து முக்கிய சாலைகளில் நடமாடும் சூழல் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சேலாஸ் சாலையில் இன்று யானைகள் சாலையை கடக்க முற்பட்டன. அப்போது, அவ்வழியே வாகனத்தில் வந்த இளைஞர்கள் யானை கூட்டம் முன்பு நின்றுக் கொண்டு செல்ஃபி எடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த யானைகள் திடீரென இளைஞர்களை நோக்கி ஓடி வந்தன. இதை கண்டதும் பொதுமக்கள், சப்தமிட்டதால் இளைஞர்கள் ஓடி தப்பினர். சிறிது தூரம் துரத்திய யானைகள் பின்னர் சாலையோரமாக இறங்கி வனத்துக்குள் சென்று மறைந்தன.

இளைஞர்களின் இத்தகைய செயல்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, "வனப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் அத்துமீறும் போது, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தை உணராமல் நடந்துக்கொள்ளும் இத்தகைய இளைஞர்களை பார்த்து சுற்றுலா பயணிகளும் வனவிலங்குகளிடம் அத்துமீறுவார்கள். வனத்துறையினர் அந்த இளைஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in