`கழிப்பறையில் மகள் தங்கச் சொல்கிறாள்'- ஆட்சியரை பார்க்க காத்திருக்கும் வயோதிக தம்பதி கண்ணீர்

`கழிப்பறையில் மகள் தங்கச் சொல்கிறாள்'- ஆட்சியரை பார்க்க காத்திருக்கும் வயோதிக தம்பதி கண்ணீர்
மனைவியுடன் ஞானதாஸ்

தன் மகள் சொத்துகளை அபகரித்துக்கொண்டு தன்னையும், தன் மனைவியையும் சரியாக கவனிக்காமல் இழுத்தடிப்பதாக ஞானதாஸ் என்ற முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார். அவர் இன்று காலை 9 மணியில் இருந்து, இப்போதுவரை யாரை சந்தித்து தீர்வுபெறுவது என்றே தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்திலேயே சுற்றிவருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதியவர் ஞானதாஸ் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “என் மனைவியும், நானும் எங்கள் சொத்துகளை எங்கள் மகளுக்கு எழுதிவைத்தோம். சொத்துகளை அவர் பெயரில் எழுதிவைக்கும்வரை எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார். சொத்துகளை அவர் பெயருக்கு எழுதியதும் மகளின் நடவடிக்கைகள் மாறிவிட்டது. கழிப்பறையிலேயே என்னையும், என் மனைவியையும் தங்கிக்கொள்ளுங்கள் என திட்டுகிறார். எங்கள் சொத்தை அனுபவிக்கும் மகள், செலவுக்கு பணம் தராததோடு, சாப்பாடு கூட சரியாகப் போடுவதில்லை.

பெற்றோரை சரியாக பராமரிக்காவிட்டால் குழந்தைகளுக்குக் கொடுத்த சொத்துகளை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என பேப்பரில் படித்தேன். அதனால் தான் ஆட்சியர் அலுவலகம் வந்தேன். ஆட்சியர் கூட்டத்தில் இருப்பதாக சொல்லி, அதிகாரிகள் சமூக நலத்துறைக்கு சொல்லச் சொன்னார்கள். அங்கே போய் மணிக்கணக்கில் காத்திருந்தோம். அங்கும், கடைசியில் இதை ஆட்சியர் தான் தீர்த்துவைக்க முடியும் என ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டார்கள். காலை 9 மணியில் இருந்தே நிற்கிறோம். மணி இப்போது மாலை 4 தாண்டிவிட்டது. கூட்டம் முடிந்ததும் ஆட்சியரை சந்திக்கமுடியும் என காத்திருக்கிறோம்’’என்றவர் கடைசிவரை தன் மகள், ஊர் பெயரை சொல்லவே இல்லை.

அதைப்பற்றி நாம் கேட்டபோதும், ``ஆயிரம் தான் இருந்தாலும் என் மகள் அல்லவா? நாலு பேப்பரில் பெத்தவங்களை சரியாக கவனிக்கலைன்னு அவ பேரு வந்தா.. அவளுக்கு குறைச்சல் தானே! வேண்டாம் தம்பி’’ என்கிறார் வெள்ளந்தியாக. முதியவர் ஞானதாஸ், ஆட்சியரை சந்திக்கவும், தன் நிலையை எடுத்துச் சொல்லவும் ஆட்சியர் அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் இப்போது முயற்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.