`ஊடகங்களில் பேச எங்களிடம் அனுமதி பெற வேண்டும்'- சர்ச்சையானது காமராசர் பல்கலை பதிவாளர் சுற்றறிக்கை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

``மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி பெற்றுத்தான் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டும்'' என பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, துணைவேந்தரின் இல்லத்தை முற்றுகையிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியான நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் கடந்த மே 10-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பதற்கு பதிவாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனநாயக அமைப்பைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத ஒருவர் நம்மிடம் கூறும் போது, "பல்கலைச் விதித்த தொகுப்பு பிரிவு 8 ன் கீழ் உள்ள விதி எண் 29ஐ(Statutes 29 of Chapter VIII Madurai Kamaraj University Calendar Vol.1) மேற்கோள் காட்டுகிறார். பல்கலைக்கழக விதித் தொகுப்பு பிரிவு VIll ஆனது பேராசிரியர்கள், தகைசால் போராசியர்கள், விரிவுரையாளர்கள், குறித்து பேசுகிறது. அவர்களது நியமனம், கடமை உள்ளிட்ட நிர்வாக, அதிகார உரிமைகளை பற்றிப் பேசுகின்றது. அதிலும் மிகவும் குறிப்பாக பல்கலைக்கழகம் சுட்டுகிற 29-வது விதியின் கீழ், அரசு ஊழியர்கள் தொடர்பிலான விதிகளில் பல்கலைக் கழகச் சட்டத்தில் ஏதேனும் விடுபட்டிருப்பின் தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கான விதிகளே பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொருத்தமானது என விதி சொல்லும் போது, அரசு ஊழியர்கள், அல்லாத ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் எப்படி இந்த விதி பொருந்தும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கை
பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கை

மேலும், "முக்கிய விருந்தினர்கள் யாரேனும் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிய இருந்தால் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை முழுமையாக கட்டுக்குள் வைக்கும் முயற்சியாக இது உள்ளது. சுற்றறிக்கை பொத்தாம் பொதுவாக ஊடகங்களை சந்திப்பதற்கு அனுமதி கோர வேண்டும் என மிரட்டுவது அரசியலமைப்பு உறுதி செய்திருக்கிற பேச்சுரிமைக்கு எதிரான செயல்பாடாகும். இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இது போன்ற உரிமைகளை பறிக்கக்கூடிய செயல்கள் நடைபெற்று வரும் சூழலில் தமிழகத்தில் முதல் முறையாக இது போன்று நடந்திருப்பது பயத்தை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.

இந்த சுற்றறிக்கை கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. இது சட்டவிரோதம் மட்டுமின்றி ஜனநாயக மறுப்பும் கூட என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கு தொடர்புள்ள செய்திகளுக்குத்தான் அனுமதி பெற வேண்டுமே தவிர, ஒரு நாட்டின் குடிமகனாக ஊடகங்களை அணுகுவதற்கு எந்த தடையையும் விதிக்க முடியாது என்றும், பல்கலைக்கழகம் இந்த சுற்றறிக்கை பேச்சுரிமைக்கு எதிரானது என்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று கடந்த மே 12-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in